மே 31ஆம் தேதி செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும் ‘லூமிஹெல்த்’

மே 31ஆம் தேதி செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும் ‘லூமிஹெல்த்’

2 mins read
cd34eea7-37e9-49e1-aa6f-fb0e719756ed
பயனீட்டாளர்கள் ஆரோக்கிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க ஹெல்தி 365 செயலியைத் தொடர்ந்து பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் சுகாதார மேம்பாட்டு வாரியமும் ஏப்பிள் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய சுகாதார, நலத் திட்டம் இவ்வாண்டு மே 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பதிலாக ‘ஹெல்தி 365’ செயலியைப் பயன்படுத்தும்படி திட்டத்தில் இணைந்தோர் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ‘லூமிஹெல்த்’ (LumiHealth) திட்டம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க பல சிங்கப்பூரர்களுக்கு உதவியுள்ளது.

உடற்பயிற்சி, தூக்கம், ஆரோக்கிய உணவுப் பழக்கம், மனநலம் ஆகிய அம்சங்களில் லூமிஹெல்த் திட்டம் கவனம் செலுத்தியது.

உடற்பயிற்சி போன்ற நடவடிக்கைகளை முடிக்கும் பயனீட்டாளர்கள் அதற்குரிய புள்ளிகளைப் பெறுவர். அந்தப் புள்ளிகளை அவர்கள் பற்றுச்சீட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.

லூமிஹெல்த் என்ற இலவச செயலியை 377,000க்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாகச் சுகாதார மேம்பாட்டு வாரியம் தெரிவித்தது.

மார்ச் 31ஆம் தேதி வரை லூமிஹெல்த் செயலியைப் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்து புள்ளிகளைப் பயனீட்டாளர்கள் பெறலாம் என்று வாரியம் குறிப்பிட்டது. அவ்வாறு பெறப்படும் புள்ளிகளை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் மின் பற்றுச்சீட்டுகளாக மாற்றிக்கொள்ளவேண்டும். மே 31ஆம் தேதி அல்லது காலாவதி தேதிக்குள் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளும்படி வாரியம் அறிவுறுத்தியது.

பயனீட்டாளர்கள் ஆரோக்கிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க ஹெல்தி 365 செயலியைத் தொடர்ந்து பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி ஏறக்குறைய 885,000 குடியிருப்பாளர்கள் அதாவது சிங்கப்பூரில் உள்ள பெரியவர்களில் கிட்டத்தட்ட 25 விழுக்காட்டினர் ஹெல்தி 365 செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

ஆரோக்கிய பழக்கவழக்கங்களை எப்படி மேற்கொள்வது போன்ற பல தகவல்களைச் செயலி கொண்டுள்ளது.

பயனீட்டாளர்கள் இலவச உடற்பயிற்சி வகுப்புகளுக்கும் ஆரோக்கியப் பயிலரங்குகளுக்கும் பதிவுசெய்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்