தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதைத் தடுக்க புதிய பரிந்துரைகள்

2 mins read
9aab7e41-feb3-4249-9b35-bbc174126700
அமைச்சுகளுக்கு இடையிலான குழுவின் அறிக்கை தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் (இடமிருந்து) துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், அமைச்சர் இந்திராணி ராஜா, துணை அமைச்சர் ஆல்வின் டான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நிதிக் கட்டமைப்பின் மூலம் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதைத் தடுக்கும் முயற்சியாக, ஒழுங்குமுறைப்படுத்தப்படாத துறைகளுக்கு ஐயத்திற்குரிய பரிவர்த்தனைகளை அடையாளம் காண்பது குறித்து ஆலோசனை வழங்கப்படும்.

ஆடம்பர, சொகுசுப் பொருள்கள் விற்கும் வணிக நிறுவனங்களும் அத்துறையின்கீழ் வரும்.

அத்தகைய பொருள்களுக்கான விலைமதிப்பில் பெரும்பகுதியை ரொக்கமாகச் செலுத்தினால் அதனை எவ்வாறு ஏற்க மறுக்கலாம் என்பது குறித்தும் உரிய அமைப்புகள் அவ்வணிகர்களுக்கு ஆலோசனை வழங்கும்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதைத் தடுப்பதற்கான அமைச்சுகளுக்கு இடையிலான குழு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) வெளியிட்ட அறிக்கையில் இந்த நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2023 ஆகஸ்ட்டில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது தொடர்பில் வெளிநாட்டவர் பத்துப் பேர் கைதுசெய்யப்பட்டனர். $3 பில்லியன் மதிப்பிலான சொத்துகளும் கைப்பற்றப்பட்டன.

அச்சம்பவத்தை அடுத்து, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதைத் தடுக்கும் சிங்கப்பூரின் கட்டமைப்பை மறுஆய்வு செய்யும் நோக்குடன், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தலைமையில் 2023 நவம்பரில் அமைச்சுகளுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டது.

சிங்கப்பூரின் பாதுகாப்பு அம்சங்களைத் தவிர்ப்பதற்குக் குற்றவாளிகள் கையாளும் உத்திகள் குறித்து மதிப்புமிக்க பாடங்களை அவ்வழக்கு சுட்டிக்காட்டியதாக அமைச்சர் இந்திராணி செய்தியாளர்களிடம் கூறினார்.

குற்றவாளிகள் புதுப்புது உத்திகளைக் கையாள்வதால், அதனை எதிர்கொள்ளும் வகையில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதைத் தடுக்கும் கட்டமைப்பைச் சிங்கப்பூர் கொண்டிருப்பதை உறுதிசெய்யும் நோக்குடன் அதற்கான மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.

சட்டவிரோதமாக வருமானம் ஈட்டுவோர், அதனைப் பேணும் வகையில் பொதுவாக ஆடம்பரமான வீடு, சொகுசு கார் போன்ற பெரிய சொத்துகளையே வாங்கக்கூடும் என்று அமைச்சர் சுட்டினார்.

அதே நேரத்தில், குற்றவாளிகள் காலத்திற்கும் நிகழ்போக்கிற்கும் (Trend) ஏற்ப தாங்கள் வாங்கும் பொருள்களை மாற்றலாம் என்பதால் அவற்றை முழுமையாகப் பட்டியலிடுவது கடினம் என்றும் அவர் சொன்னார்.

இந்நிலையில், சிங்கப்பூர் நிறுவனங்களுடன் பலமுறை நடத்திய ஆலோசனைகளைத் தொடர்ந்து, அமைச்சுகளுக்கு இடையிலான குழு புதிய பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் இந்திராணி கூறினார்.

நிதி நிறுவனங்கள், கணக்கியல் நிறுவனங்கள், பெருநிறுவனச் சேவை வழங்குநர்கள், சூதாட்டக்கூடங்கள், விலைமதிப்புமிக்க கற்கள் மற்றும் உலோக வணிகர்கள், வழக்கறிஞர்கள், சொத்துச் சந்தை முகவைகள் மற்றும் மேம்பாட்டாளர்கள் போன்றோர், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்ற முடியும் என்றார் அமைச்சர்.

அத்துடன், சாத்தியமுள்ள குற்றச் செயல்களை விரைந்து கண்டறிய ஏதுவாக, சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள் தங்களுக்கு இடையிலான தகவல் பகிர்வு நடைமுறைகளையும் வலுப்படுத்தும்.

சிங்கப்பூர்க் காவல்துறையின் ‘நேவிகேட்’, அத்தகையதொரு தளம். அதன்படி, ஐயத்திற்குரிய அம்சங்கள் ஏதேனும் இடம்பெற்றுள்ளனவா என்பதை அடையாளம் காணும் நோக்குடன், சிங்கப்பூரின் சட்ட அமலாக்க அமைப்புகளும் உரிய மற்ற அமைப்புகளும் தங்கள் தரவுத்தளங்களை ஒன்று மற்றொன்றின் தரவுத்தளங்களைச் சோதிக்கும்.

‘நேவிகேட்’ தளம் அடுத்த சில ஆண்டுகளுக்குள் அறிமுகம் காணும்.

குறிப்புச் சொற்கள்