லக்சம்பர்க்: லக்சம்பர்க்கில் முதல் முறையாக அடியெடுத்து வைத்துள்ள அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு அங்கு 21 பீரங்கி குண்டுகள் முழங்க ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மார்ச் 27ஆம் தேதி காலை லக்சம்பர்க்கின் ஆட்சியாளரான ஹென்றி, அவரது மனைவி மரியா தெரேசா ஆகியோர் அரண்மனைக்கு முன்பு அதிபர் தர்மனையும் அவரது துணைவியார் ஜேன் இத்தோகியையும் வரவேற்றனர். இதையடுத்து, சிங்கப்பூர் தலைவர் ஒருவர் லக்சம்பர்க்கிற்கு மேற்கொண்ட முதல் அரசுமுறைப் பயணம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.
திரு தர்மனின் இரண்டு நாள் பயணம், இரு நாடுகளுக்கு இடையே அரசதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதையும் நினைவுகூர்கிறது. 1975 மார்ச் மாதம் சிங்கப்பூருக்கும் லக்சம்பர்க்குக்கும் இடையே அரசதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டது.
அதிபர் தர்மனுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்ட பிறகு 21 பீரங்கிக் குண்டுகளின் முழக்கத்துக்கு மத்தியில் அரண்மனையில் சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் அவரும் திருமதி தர்மனும் லக்சம்பர்க் ஆட்சியாளரையும் அவரது மனைவியையும் சந்தித்துப் பேசினர்.
பின்னர், இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் லக்சம்பர்க் ஒற்றுமை தேசிய நினைவுச்சின்னத்தில் திரு தர்மன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நாஸிக்களின் ஆக்கிரமிப்பின்போது நாடு உறுதியுடன் ஒற்றுமையுடன் எதிர்கொண்டதை நினைவுகூரும் வகையில் அந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
லக்சம்பர்க் வழியாகப் பாயும் பெட்ரஸ் ஆற்றை நோக்கியிருக்கும் நினைவுச் சின்னத்தின் முன்புறத்தில் அணையா விளக்குக்கு முன்பு சடங்குபூர்வ வாளை ஏந்தியிருந்த அவர், இரண்டாம் உலகப் போரின் நினைவுக் குழுக்களையும் விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களையும் சங்கத்தினரையும் வரவேற்றார்.
அரண்மனைக்குத் திரும்பியதும் அந்நாட்டின் துணைப் பிரதமர், வெளியுறவு அமைச்சர், வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அவர் சந்தித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தச் சந்திப்புகளின்போது, இரு தரப்பினரும் இரு நாடுகளுக்கு இடையிலான அரசதந்திர உறவின் 50வது ஆண்டு நிறைவை வரவேற்றனர். வலுவான இருதரப்பு பொருளியல் ஒத்துழைப்பும் போற்றப்பட்டது,” என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் தெரிவித்தது.
பாரம்பரிய தொழில்துறைகளான வர்த்தகம், நிதி மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகளான மின்னிலக்க, விண்வெளி தொழில்நுட்பத்தில் அதிக ஒத்துழைப்புக்கான சாத்தியம் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர்.
அது மட்டுமல்லாமல், உலகளாவிய, வட்டார முன்னேற்றங்கள், சிறிய நாடுகள் அதில் எவ்வாறு பங்காற்றலாம் உள்ளிட்டவை பற்றியும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
லக்சம்பர்க் 680,000 மக்கள்தொகையைக் கொண்ட மேற்கு ஐரோப்பிய நாடாகும். இது, உலகின் தனிநபருக்கான அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். மேலும், வலுவான நிதி ஆதாரத்தையும் அது பெற்றுள்ளது.
ஐரோப்பாவின் மிகச்சிறிய நாடாக இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளிலேயே சிங்கப்பூரில் அதிக முதலீடு செய்யும் நாடாக அது உள்ளது. ஐரோப்பாவில் சிங்கப்பூரின் மிகப்பெரிய முதலீட்டு நாடாகவும் அது உள்ளது.
ஏறக்குறைய 500 லக்சம்பர்க் நிறுவனங்கள் சிங்கப்பூரில் செயல்படுகின்றன. அவற்றில் ஐரோப்பாவின் மிகப்பெரிய சரக்கு விமான நிறுவனமான கார்கோலக்ஸ், உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி நிறுவனமான ஆர்செலர்மிட்டல் ஆகியவை அடங்கும்.

