விடுமுறையை கப்பல் பயணத்தில் கழிக்கலாம் என்று குடும்பத்தோடு ஆவலுடன் காத்திருந்த பலருக்கு அதிருப்தியே ஏற்பட்டுள்ளது.
‘வோர்ல்ட் லெகசி’ (World Legacy) என்ற சொகுசுக் கப்பலில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) முதல் பயணிக்க பலர் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் அதற்கு சில நாள்களுக்கு முன் டிசம்பர் 17ம் தேதியன்று அதன் நிர்வாகம் பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துவிட்டது.
அந்தக் கப்பலை நிர்வகிக்கும் ‘வோர்ல்ட் குரூசஸ்’ என்ற நிறுவனம், டிசம்பர் 18ஆம் தேதியிலிந்து அதன் சொகுசுக் கப்பலில் மக்கள் பயணம் செய்யலாம் என்று பல முன்னோடி பயணத் திட்டங்களை விளம்பரப்படுத்தியிருந்தது. பயணங்கள் ஹார்பர் ஃபிரன்டில் உள்ள சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் முனையத்திலிருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் வழக்கமான சொகுசுக் கப்பல் பயணங்களைப் போல இக்கப்பலில் தங்கியிருக்க வேண்டியதில்லை. சில மணி நேரங்கள்கூட அதில் பயணம் செய்து அதிலுள்ள வசதிகளை அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சில பயணிகள் அவர்கள் செலுத்திய கட்டணங்கள், ‘டிராகன் குரூஸ்’ என்ற பெயரில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். வோர்ல்டு குரூசஸ் நிறுவனம் முன்பதிவுகளுக்கான தொடர்புக்கு டிராகன் குரூஸ் என்ற நிறுவனத்தை பணியமர்த்தியிருந்தது.
பல பயணிகளுக்கு மின்னஞ்சலில் டிசம்பர் 17ஆம் தேதி மாலை ஒத்திவைப்புக்கான அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கட்டணங்களைத் திருப்பி அனுப்புவதோடு ஏற்பட்ட அதிருப்திக்கு ஈடாக மாற்றுக் கப்பல் பயணத்துக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த பற்றுச்சீட்டுகளை 12 மாதங்களுக்குள் பயன்படுத்தலாம்.
பல பயணிகள் வோர்ல்ட் லெகஸி கப்பல் நிர்வாகமான வோர்ல்ட் குரூசஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த வோர்ல்ட் குரூசஸ் நிறுவனம், நடைமுறைச் செயல்பாடுகளால் டிசம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை பயண மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் பயணங்கள் டிசம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்குவதாகவும் தெரிவித்தது.
முன்பதிவு செய்த அனைத்து பயணிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு, கட்டணங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகக் கூறியது. முடிவு எடுக்கப்பட்ட தேதியையும் எத்தனை பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்பதையும் நிர்வாகம் விளக்கவில்லை.

