$3 பில்லியன் பணமோசடி வழக்கு: சொகுசு வீடுகள் ஏலம் மந்தம்

$3 பில்லியன் பணமோசடி வழக்கு: சொகுசு வீடுகள் ஏலம் மந்தம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Nov 2026 - 2:41 pm

2 mins read

சிங்கப்பூரில் பதிவான $3 பில்லியன் பணமோசடி வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவரான வாங் பிங்காங்கின் மனைவிக்குச் சொந்தமான, லியோனி ஹில் சாலையில் அமைந்துள்ள ‘நியூ ஃபியூச்சுரா’ சொகுசு அடுக்குமாடி வீடு அக்டோபர் 28ஆம் தேதி ஏலத்தில் $8.5 மில்லியனுக்கு விற்பனையானது.

2,691 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த அறுதி உரிமைச் சொத்தின் வழிகாட்டி விலையான $9.8 மில்லியனைவிட இது 13 விழுக்காடு குறைவு என்றாலும், ரிவர் வேலி திட்டத்தில் இதற்கு இணையான பரப்பளவு கொண்ட மற்றொரு வீடு ஜூலை 2025ல் விற்கப்பட்ட $8 மில்லியனைவிட இது $500,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தனி மின்தூக்கி வசதியுடன் கூடிய, 26வது மாடியில் அமைந்த நான்கு படுக்கையறை கொண்ட இந்த அடுக்குமாடி வீட்டிற்கு $8.5 மில்லியன் என்ற ஒற்றைக் கேட்புத்தொகை மட்டுமே கோரப்பட்டது. கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஏலத்திற்கு விடப்பட்ட மொத்தம் 47 சொத்துகளில் இதுவரை விற்பனையான ஐந்தாவது சொத்து இதுவாகும்.

இதற்கு முன்னதாக, வாலிச் ரெசிடன்ஸ், மார்ட்டின் மாடர்ன் ஆகிய திட்டங்களில் இருந்த மற்ற நான்கு சொகுசு அடுக்குமாடி வீடுகள் செப்டம்பர் 23ஆம் தேதி மொத்தம் $16.28 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன.

வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவின் தீவிர புலன்விசாரணையின்போது பறிமுதல் செய்யப்பட்ட 80க்கும் மேற்பட்ட சொத்துகளில் 50 விழுக்காட்டுக்கும் மேலானவை இதுவரை பொது ஏலத்திற்கு வந்துள்ளன.

இருப்பினும், இந்தச் சொத்துகளை விற்றுப் பணமாக்குவதற்காக டெலாய்ட் ஆலோசனை நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட மூன்று தரகு நிறுவனங்களில் இரண்டிற்கு மட்டுமே இதுவரை ஓரளவு வெற்றி கிட்டியுள்ளது. இதில் ‘எஸ்ஆர்ஐ’ நிறுவனம் தனது 16 சொத்துகளில் ஐந்தை மட்டுமே விற்றுள்ளன.

அதாவது, செப்டம்பர் 23ஆம் தேதி 10 சொத்துகளில் நான்கையும் அக்டோபர் 28ஆம் தேதி ஆறு சொத்துகளில் ஒன்றையும் மட்டுமே அந்நிறுவனத்தால் விற்க முடிந்தது.

இந்த ஏலங்கள் எதிர்பார்த்த வேகத்தில் செல்லாததற்கு முக்கியக் காரணமாக, பெரும்பாலான சொத்துகள் மத்திய வட்டாரத்தில் அமைந்திருப்பதும், அவற்றின் விலை $5 மில்லியன் முதல் $25 மில்லியன் வரை நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதனால் பணக்கார சிங்கப்பூரர்களைத் தவிர மற்றவர்களால் இவற்றை வாங்க இயலவில்லை. அத்துடன், சிங்கப்பூரில் குடியிருப்புச் சொத்துகளை வாங்கும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்படும் 60 விழுக்காடு கூடுதல் வாங்குபவர் முத்திரை வரி, வெளிநாட்டு வாங்குபவர்களின் ஆர்வத்தை வெகுவாக மட்டுப்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்