தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவர் மனங்கவர்ந்த மாணவர் முரசு

2 mins read
eaf051e2-774e-4ecc-a173-7fb225b34c3e
திரு ச. ரவிக்குமாரின் இல்லத்தில் நீங்கா இடம்பிடித்துள்ளது தமிழ் முரசு நாளிதழ். (உடன்) பிள்ளைகள் ஆகர்ஷனா, நிதர்‌‌‌‌ஷனா, துணைவியார் திருவாட்டி ராஜலக்‌ஷ்மி. - படம்: வி‌ஷ்ணு வர்தினி

ஆ. விஷ்ணு வர்தினி

பருவநிலை மாற்றத்தால் வடதுருவப் பனிக்கரடிகளுக்குக் கூடிய விரைவில் தங்க இடமில்லாமல் போய்விடும் என்றது ஒரு செய்தி.

அதைக் கண்டு தம்முடைய 12 வயது மகள் நிதர்‌‌ஷனா கவலையடைந்ததில் திருவாட்டி ராஜலக்‌ஷ்மி ரவிக்குமார், 44, வியப்படைந்தார்.

சிறுவர்களுக்காக வெளிவரும் மாணவர் முரசில் பனிக்கரடிகளைப் பற்றிய செய்தி நிதர்‌‌‌ஷனாவைப் பாதித்ததோடு அதுபற்றிய கருத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஆற்றலையும் தந்தது.

திருவாட்டி ராஜலக்‌ஷ்மியின் இல்லத்தில் மாணவர் முரசு கடந்த ஆறு ஆண்டுகளாகத் தனி இடத்தைப் பிடித்துள்ளது. அதில் வெளிவரும் வண்ணம் தீட்டுதல், சித்திரக் கதைகள், புதிர்கள் என்றால் நிதர்‌‌ஷனாவுக்குக் கொள்ளைப் பிரியம்.

சிறுவர்களுக்குப் பிடித்த புனைவையும் அவர்களின் புரிதலுக்கு ஏற்ற எளிய செய்திகளையும் தரும் மாணவர் முரசு, சிந்திக்க வைக்கும் நடவடிக்கைகளால் பொது அறிவு, மொழித்திறன், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை பிள்ளைகளிடம் வளர்த்துவிடும் வளமாக திருவாட்டி ராஜலக்‌ஷ்மி கருதுகிறார்.

மாணவர் முரசில் இடம்பெறும் பல படங்கள் பிள்ளைகளுக்குப் புதுச் சொற்களையும் செய்திகளையும் எடுத்துச்சொல்ல திருவாட்டி ராஜலக்‌ஷ்மிக்கு வசதியாக இருக்கிறது.

தொடக்கப்பள்ளி ஆறாம் நிலை மாணவியான நிதர்ஷனாவை அண்மைக்காலமாக மாணவர் முரசில் இடம்பெறும் உவமைத்தொடர்கள் அதிகம் கவர்ந்துள்ளன.

அம்மாவின் உதவியோடு அவற்றின் பொருளை விளங்கிக்கொண்டு ஒரு புத்தகத்தில் தொகுத்து எழுதிவைக்கும் பழக்கம் நிதர்‌‌ஷனாவுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த உவமைத்தொடர்கள் நிதர்‌‌ஷனாவின் தமிழ்க் கட்டுரைகளிலும் இடம்பிடிக்கத் தவறுவதில்லை.

பெற்றோரிடம் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருந்தால்தான் பிள்ளைகளிடமும் அதைக் கொண்டு சேர்க்க முடியும் என்கிறார் திருவாட்டி ராஜலக்‌ஷ்மி.
பெற்றோரிடம் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருந்தால்தான் பிள்ளைகளிடமும் அதைக் கொண்டு சேர்க்க முடியும் என்கிறார் திருவாட்டி ராஜலக்‌ஷ்மி. - படம்: வி‌ஷ்ணு வர்தினி

தங்கை நிதர்‌‌ஷனாவுக்கு மாணவர் முரசில் ஆர்வம் என்றால் 19 வயது அக்கா ஆகர்ஷனா இளையர் முரசைக் கையில் எடுக்கிறார். சக வயது மாணவர்களின் நேர்காணல்களையும் அவர்களின் ஊக்கமளிக்கும் கதைகளையும் ஆகர்‌‌ஷனா விரும்பிப் படிக்கிறார்.

“கல்வியில், கலைகளில், சமூக நடவடிக்கைகளில் சிறக்கும் மாணவர்களைப் பார்ப்பது ஊக்கம் அளிக்கிறது,” என்றார் ஆகர்ஷனா.

தெனாலிராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் எனத் தொடங்கி, தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை சிறுவயதிலேயே திருவாட்டி ராஜலக்‌ஷ்மி தம் இரு பிள்ளைகளிடமும் புகுத்தியுள்ளார்.

தற்போது மாணவர் முரசும் தமிழ் முரசும் தம் பிள்ளைகளின் மொழிவளத்தைத் தாண்டி, உலக அறிவைப் பெருக்குவதாக அவர் உணர்கிறார்.

“தமிழ்மொழி கற்றலை இன்னும் சுவையானதாக மாற்றியிருக்கின்றன மாணவர் முரசும் இளையர் முரசும். பிள்ளைகளின் மொழி ஆற்றலையும் தமிழ்மொழிமீது பற்றையும் ஆர்வத்தையும் வளர்க்கவும் அவை உதவுகின்றன. தமிழ்மொழியோடு நீண்ட காலம் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அது உதவும்,” என உறுதியுடன் நம்புகிறார் திருவாட்டி ராஜலக்‌ஷ்மி.

சிறுகதைகள், கவிதைகள் என மாணவர்களின் படைப்புகள் அவ்வப்போது வெளிவருவதையும் வரவேற்ற அவர், அவற்றை இன்னும் அதிகமாகக் காண விருப்பம் தெரிவித்தார்.

வாசித்தலோடு நின்றுவிடாமல் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் தளத்தை உருவாக்கவேண்டும் என்பது அவரின் வேண்டுகோள்.

பெற்றோரின் நடவடிக்கைகளைப் பார்த்து பிள்ளைகள் வளர்கிறார்கள் என்ற திருவாட்டி ராஜலக்‌ஷ்மி, செய்தித்தாள் வாசிப்பதைப் பெற்றோர் பழக்கமாக்கிக்கொண்டால் பிள்ளைகள் அதன்பால் ஈர்க்கப்படுவர் என்றார்.

vishnuv@sph.com.sg

குறிப்புச் சொற்கள்