உடற்குறையுள்ளோருக்கு உதவ இயந்திர நாய் வழிகாட்டி, உணர்திறன் வரைபடம்

உடற்குறையுள்ளோருக்கு உதவ இயந்திர நாய் வழிகாட்டி, உணர்திறன் வரைபடம்

2 mins read
கரையோரப் பூந்தோட்டத்தின் புதிய முயற்சி
908a2574-fb5a-4d49-8aad-b77ad2d38748
மூன்றாம் காலாண்டிலிருந்து, பார்வைக் குறைபாடுள்ள வருகையாளர்கள் கரையோரப் பூந்தோட்டத்தில் உள்ள  ‘பூக்குவிமாடம்’ பகுதியை மற்றவர்களின் உதவியின்றி சுற்றிப்பார்க்க, இலவச இயந்திர நாய் வழிகாட்டிச் சேவை உதவும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பார்வைக் குறைபாடுள்ளோரும் கரையோரப் பூந்தோட்டத்தில் உள்ள ‘பூக்குவிமாடம்’ (Flower Dome) பகுதியைச் சுற்றிப் பார்க்கும் வகையில், இலவச இயந்திர நாய் வழிகாட்டிச் சேவை விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

அத்துடன், தங்களைச் சுற்றியுள்ள சூழலை அவர்கள் கண்டறிய உதவும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் காதொலிப்பான் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆட்டிசம் எனும் மதியிறுக்கக் குறைபாடு உள்ளோரும் அவர்களின் கவனிப்பாளர்களும் தங்கள் வருகையை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இணைய உணர்திறன் வரைபடம் (Online sensory map) ஒன்றும் தயாரிக்கப்படவுள்ளது.

இந்த முன்னெடுப்புகளுடன் கூடுதலாக, சிங்கப்பூரில் இருக்கும் பொது இடங்களை எளிதில் அடைவது தொடர்பான தீர்வுகளை உள்ளூர் நிறுவனங்கள் மேம்படுத்துவதற்கு ஒரு சோதனைத் தளமாகவும் கரையோரப் பூந்தோட்டம் செயல்படும் என தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.

மேலும், பார்வையாளர்கள் தன்னாட்சியுடனும் நம்பிக்கையுடனும் பொது இடங்களைச் சுற்றிப்பார்க்க இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 22ஆம் தேதி, கரையோரப் பூந்தோட்டத்தின் ‘கிஃப்ட் ஆஃப் கார்டன்ஸ்’ (Gift of Gardens) சமூக நலத்திட்டப் பயனாளிகள், தொண்டூழியர்கள், நன்கொடையாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பாராட்டு விருந்து நிகழ்ச்சியில் திரு சீ இவ்வாறு கூறினார்.

பிடிமான வசதியுடன் கூடிய இந்த இயந்திர நாய் வழிகாட்டியை ரோம்அசிஸ்ட் என்ற உள்ளூர் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் அது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்