தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சக ஊழியரின் உயிரிழப்பு தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர்

2 mins read
fa4c0c51-e18c-4ad7-9707-cc59c953c6ca
குற்றச்சாட்டிலிருந்து திரு உட்டோம் விடுவிக்கப்பட்டுள்ளதால் இதே குற்றம் தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்த முடியாது. - படம்: பிக்சாபே

சக ஊழியர் 2020ஆம் ஆண்டில் உயிரிழந்ததன் தொடர்பில் பங்ளாதேஷைச் சேர்ந்த 44 வயது திரு உட்டோம் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து ஜனவரி 2ஆம் தேதியன்று அக்குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

தன் கவனக்குறைவால் அருகிலிருந்த ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியதாக திரு உட்டோம் மீது முன்னதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

11 ஷிப்யார்ட் கிரெசண்ட்டில் அமைந்துள்ள ஆலையின் இயந்திரம் ஒன்றை 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று இயக்கிக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த சக ஊழியரின் உயிருக்கு ஆபத்து நேரும் வகையில் திரு உட்டோம் நடந்துகொண்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

ஊழியர்கள் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட சமயத்தில் இயந்திரத்தின் பொத்தானை திரு உட்டோம் அழுத்தியதால் இயந்திரத்தின் கதவு மூடியது. இயந்திரத்தை இயக்கத் தொடங்குவதற்கான பொத்தானை அழுத்துவதற்குப் பதிலாகக் கதவு மூடுவதற்கான பொத்தானைத் தவறுதலாக அவர் அழுத்திவிட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இயந்திர இயக்கத்தைக் கண்காணித்துக்கொண்டிருந்த திரு கருப்பையா செல்வராஜ் உயிரிழக்க, திரு உட்டோமின் செயல் காரணம் என்று முன்னர் கூறப்பட்டது. திரு கருப்பையா உயிரிழந்துவிட்டதைச் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, குற்றச்சாட்டிலிருந்து திரு உட்டோம் விடுவிக்கப்பட்டுள்ளதால் இதே குற்றம் தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்த முடியாது.

வெளிநாட்டு ஏற்றுமதிக்காக உலோகக் கழிவுகளைக் கையாளும் ‘கிம் ஹோக் கார்ப்’ நிறுவனத்திற்கு, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியன்று திரு கருப்பையாவின் மரணம் தொடர்பில் $240,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நவம்பரில் மனிதவள அமைச்சு தெரிவித்தது.

இயந்திரங்களைக் கையாளும் ஊழியர்களுக்கு நிறுவனம் முறையான பயிற்சிகள் வழங்கவில்லை என்று மனிதவள அமைச்சின் விசாரணையில் குறிப்பிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்