சிங்கப்பூரில் புதிய தானியக்க நிலையத்தைத் திறந்தது மெர்ஸ்க்

உலக அளவில் பெருகும் மின்வர்த்தகம்

சிங்கப்பூரில் புதிய தானியக்க நிலையத்தைத் திறந்தது மெர்ஸ்க்

2 mins read
a03ad280-9b7e-490c-8a7f-4b672cabe10e
அதிக நிறுவனங்கள், மற்ற இடங்களிலிருந்து குறைந்த காலத்திற்குள் பொருள்களைப் பெற விரும்புவதாகக் கூறப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

பயனீட்டாளர்களிடையே அன்றாடப் பொருள்களுக்கான தேவை குறையவில்லை என்று உலகின் ஆகப் பெரிய கப்பல் நிறுவனமான ஏபி மோலர் மெர்ஸ்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் கிளெர்க் தெரிவித்திருக்கிறார்.

மக்கள் இன்னும் துணிமணிகளையும் உடைந்த கருவிகளுக்குப் பதிலாகப் புதியனவற்றையும் வாங்குவதாக அவர் சொன்னார். உலக அளவில் நிலவும் பதற்றமான சூழலுக்கும் மாறிவரும் வர்த்தகப் போக்கிற்கும் இடையே பொருள்களுக்கான தேவையில் மாற்றமில்லை என்று திரு கிளெர்க் கூறினார்.

“பிரச்சினைகளுக்கு இடையிலும் மக்கள், அவர்களின் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லப் புதிய பைகளை வாங்கித் தருகின்றனர். புதிய ‘ஃபார்முலா ஒன்’ பருவம் தொடங்கும்போது புதுத் தொலைக்காட்சிச் சாதனங்களைப் பலர் வாங்குவர்,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் புதன்கிழமை (மார்ச் 18) முழுமையான தானியக்க உலகளாவிய, வட்டார விநியோக நிலையத்தின் தொடக்க நிகழ்ச்சியில் திரு கிளெர்க் பேசினார்.

சிங்கப்பூரிலிருந்து இந்த வட்டாரத்திற்குப் பொருள்களைக் கப்பல்களில் கொண்டுசெல்லவும் சேமித்துவைக்கவும் நிறுவனங்களுக்கு அது உதவுகிறது. ‘வர்ல்ட் கேட்வே II’ எனும் அந்த நிலையத்தின் பரப்பளவு 1.1 மில்லியன் சதுர அடி. அது கிட்டத்தட்ட 20 காற்பந்துத் திடல்களுக்கு நிகராக இருக்கும். $200 மில்லியன் வெள்ளி செலவில் அது உருவாக்கப்பட்டுள்ளது.

அன்றாடப் பொருள்கள், சில்லறை விற்பனைப் பொருள்கள், அழகு, சுகாதாரப் பராமரிப்புப் பொருள்கள், கருவிகள், மருந்து மாத்திரைகள், மின்னணுப் பொருள்கள் முதலியவற்றைப் புதிய நிலையம் கையாளும்.

நிலையம் சிங்கப்பூரின் புதிய துவாஸ் துறைமுகத்திற்கு அருகே அமைந்துள்ளது. அங்குக் கிடங்கில் சேமித்துவைக்கப்படும் பொருள்களுக்குப் பொருள் சேவை வரி கட்டவேண்டிய தேவை இல்லை. ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் தளவாட, மின்வர்த்தக ஆற்றல்களை மெர்ஸ்க் நிறுவனம் விரிவாக்குவதைப் புதிய நிலையம் காட்டுகிறது. சீனாவிலும் மலேசியாவிலும் நிறுவனம் அத்தகைய இரண்டு நிலையங்களை நிறுவியிருக்கிறது.

‘வர்ல்ட் கேட்வே ‌II’ நிலையத்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி இடம் நிரப்பப்பட்டுவிட்டது. ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள மெர்ஸ்க் நிறுவனத்தின் ‘வர்ல்ட் கேட்வே I’ஐயும் சேர்த்து, சிங்கப்பூரில் அதன்கீழ் இயங்கும் நிலையங்களின் பரப்பளவு 2.2 மில்லியன் சதுர அடிக்குக் கூடியுள்ளது.

புதிய நிலையத்தின் தொடக்க நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மெர்ஸ்க் நிறுவனம், வர்த்தகத்தை விரிவுபடுத்தியிருப்பது அனைத்துலகத் தளவாட நடுவம் எனும் சிங்கப்பூரின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்குப் போர் உட்பட அண்மைப் பூசல்கள், முக்கியக் கப்பல் பாதைகளையும் உலகளாவிய தளவாடக் கட்டமைப்புகளையும் பாதித்திருப்பதாக அவர் சொன்னார். அதனால் வர்த்தக நடவடிக்கைகளை வேறு பாதைகளுக்கு மாற்றிவிட வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். சிங்கப்பூர் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்வதை உறுதிசெய்யத் தொடர்ந்து முதலீடு செய்வது முக்கியம் என்றார் துணைப் பிரதமர் கான்.

குறிப்புச் சொற்கள்