பொங்கோல் வட்டாரத்தின் புளோக் 405ஏ நார்த்ஷோர் டிரைவில் அமைந்துள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதிய ஆடவர் ஒருவரின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஏஷியாஒன் இணையத்தளத்தின் கேள்விக்கு அளித்த பதிலில், காலை 10 மணியளவில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
அதிகாரிகள் சென்று பார்த்தபோது அந்த 71 வயது ஆடவரின் உடல் அசைவின்றிக் காணப்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆடவரின் தமக்கை அவரைத் தொடர்புகொள்ள முயன்றதாக அண்டை வீட்டில் குடியிருக்கும் டெங் எனும் மாது, ஷின் மின் நாளேட்டிடம் கூறினார்.
ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதற்கு ஒரு வாரம் முன்னதாக, தன் தம்பியைக் கண்டால் தொலைபேசியில் அழைக்கும்படி அந்த மாது கேட்டுக்கொண்டதாக டெங் சொன்னார்.
சில நாள்கள் கழித்து முதியவரின் வீட்டுக் கதவைத் தட்டியதாகவும் பதில் இல்லாததால் அவர் உறங்கிக்கொண்டிருக்கக்கூடும் என்று நினைத்ததாகவும் டெங் குறிப்பிட்டார். மறுநாளே முதியவரின் சன்னல் கதவு திறந்திருந்ததால் பின்னர் அதுபற்றி அவர் அதிகம் கவலைப்படவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) காலை தன் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த டெங், வீட்டிற்குள் அதிகமான புழுக்களைக் கண்டார். நெளிந்துகொண்டிருந்த அப்புழுக்கள் சடலங்களின்மேல் காணப்படும் புழுக்களைப்போல் இருந்ததாக அவர் கூறினார்.
அச்சத்துடன் முதியவரின் வீட்டுக் கதவைத் தட்டியபோது வீட்டிற்குள்ளிருந்து மோசமான துர்நாற்றம் வீசியதை உணர்ந்த.அவர், உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் தந்தார்.
தொடர்புடைய செய்திகள்
முதற்கட்ட விசாரணையில், குற்றச்செயல் ஏதும் நடந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை என்று காவல்துறை கூறியது. விசாரணை தொடர்கிறது.
இதற்கிடையே, மற்றோர் அண்டை வீட்டினரான வு எனும் பெண்ணும் தன் வீட்டிற்குள் புழுக்கள் வந்ததாகக் கூறினார். ஆடவரின் வீடு ஞாயிற்றுக்கிழமை சுத்தப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

