கத்தரிக்கோல், நகவெட்டி ஆகியவற்றைக் கொண்டு இல்லப் பணிப்பெண்ணைத் தாக்கியதாக நம்பப்படும் 68 வயது பெண்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெண் தாக்கியதில் இல்லப் பணிப்பெண்ணுக்குப் பல இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஜனவரி 4ஆம் தேதி 68 வயது லிம் லேய் சூ, புக்கிட் பாத்தோக் கழக வீட்டில் பணிப்பெண்ணின் வலது முன்னங்கையில் கிள்ளியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
திருவாட்டி லிம் பின் பணிப்பெண்ணின் வலது கையில் கத்தரிக்கோலைக் கொண்டு குத்தியதாகவும் கை முட்டிக்கு நகவெட்டியைக் கொண்டு காயம் ஏற்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இல்லப் பணிப்பெண்ணின் வலது கையில் ஏழு கீறல்களுடன் சிராய்ப்பு, காயம் ஆகியவை காணப்பட்டன.
திருவாட்டி லிம் செப்டமர் 24ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இல்லப் பணிப்பெண்களைத் துன்புறுத்துவோருக்கு ஆறாண்டு சிறை, $10,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.