கிளமென்டியில் உள்ள வீட்டின் அறைக்குள் கத்தியுடன் தன்னைத்தானே பூட்டிக்கொண்ட 27 வயதுப் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேர காத்திருப்புக்குப் பிறகு அவர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 12ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 2, புளோக் 731ல் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் அறிந்து இரவு 8 மணி வாக்கில் ஷின்மின் நாளிதழின் செய்தியாளர்கள் சென்றபோது நான்கு காவல்துறை கார்களும் இரண்டு தீயணைப்பு வாகனங்களும் அங்கு நின்றிருந்தன. பல அதிகாரிகள் வீட்டுக்கு வெளியே கூடியிருந்தனர்.
பின்னர் இரவு 9 மணியளவில் முகத்தை மூடியவாறு ஒருவரை அவசர உதவி வாகனத்திற்குள் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அதிகாரிகளின் விசாரணை இரவு 10 மணி வரை நீடித்தது
அந்த வீட்டில் தொடக்கப் பள்ளி செல்லும் இரு பிள்ளைகளுடன் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். கணவருக்கு 2024ல் பக்கவாதம் ஏற்பட்டதால் அவரைக் கவனித்துக்கொள்ள மனைவி பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தினார்.
சம்பவத்தன்று இரவு கணவர் யாரையோ சத்தமாகத் திட்டியதாக அண்டை வீட்டார் கூறினார். குடும்பத்தாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து பணிப்பெண் கத்தியுடன் தன்னை உள்ளே பூட்டிக்கொண்டதாக ஷின்மின் நாளிதழ் குறிப்பிட்டது.
“சம்பவம் நடந்த வீட்டில் அக்குடும்பத்தினர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றனர். அவர்கள் அடிக்கடி சண்டையிடுவார்கள். காவல்துறை பலமுறை வந்துள்ளனர். எனினும் நிலைமை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை,” என அண்டை வீட்டார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
