தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்ச்சர்ட் பகுதியில் பணிப்பெண்கள் சட்டவிரோதமாக உணவு விற்பதாக விசாரணை

1 mins read
நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவிப்பு
eb55f639-39a5-4463-859b-e984e936f2ed
வீட்டில் சமைக்கப்பட்ட உணவைப் பெண்கள் சிலர் ஆர்ச்சர்ட் பகுதியில் சட்டவிரோதமாக விற்று வருவதாக ஷின் மின் டெய்லி நியூஸ் கண்டறிந்தது. - படங்கள்: ஸ்டோம்ப்

வீட்டில் சமைக்கப்பட்டு, பொட்டலமிடப்பட்ட உணவை வார இறுதிகளில் பெண்கள் சிலர் ஆர்ச்சர்ட் பகுதியில் விற்பதாகக் கூறப்படுகிறது.

ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலையத்தின் அருகிலும் பக்கத்திலிருக்கும் பேருந்து நிறுத்தம் ஒன்றிலும் குறைந்தது ஆறு பெண்கள் ஜனவரி 19ஆம் தேதி இவ்வாறு உணவு விற்று வந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் கண்டறிந்தது.

பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை, வாடிக்கையாளர் ஒருவர் இவர்களை அணுகி உணவு வாங்குவதைக் காண முடிந்தது.

தங்களின் தாயகத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய பாரம்பரிய உணவை, பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்கள் சிலர் தங்களின் ஓய்வு நேரத்தில் தயாரித்து இவ்வாறு கூடுதல் பணம் ஈட்டுவதாகச் செய்தியாளர் அறிந்துவந்தார்.

நெகிழியில் பொட்டலமிடப்பட்ட இந்தத் தின்பண்டங்கள் ஒவ்வொன்றும் ஐந்து வெள்ளிக்கு விற்கப்படுகின்றன.

இதற்கிடையே, ஒன்றுகூடல்களுக்கு மொத்தமாகச் சமைப்பதற்குச் சில பெண்கள் அங்கு நின்று ‘ஆர்டர்’ எடுப்பதாகவும் கூறப்படுகிறது.

மூன்று மணி நேரத்தில் சுமார் 50 பொட்டலங்களை அந்தப் பெண்கள் விற்றதைச் செய்தியாளர் கவனித்தார்.

இந்நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்டிருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு ஜனவரி 22ஆம் தேதி ‘த நியூ பேப்பர்’ ஊடகத்திடம் தெரிவித்தது.

அமைப்பின் உரிமமின்றி இவ்வாறு பொது இடங்களில் சரக்குகளையும் உணவுப் பொருள்களையும் விற்பது சட்டவிரோதமாகும். உணவுப் பாதுகாப்பு நிபந்தனைகளை மீறும் வகையில் இத்தகைய உணவுப் பொருள்களும் அமைந்திடலாம்.

குறிப்புச் சொற்கள்