சிங்கப்பூரில் உள்ள மூன்று சுகாதாரக் குழுமங்களில் இரண்டு குழுமங்களைச் சேர்ந்த நோயாளிகள், தங்களது மருத்துவக் கட்டணங்களை மருத்துவமனை முகப்புகளிலும் சுயமாக இயங்கும் இயந்திரங்களிலும் இரண்டு நாள்களுக்குச் செலுத்த முடியாது.
தேசிய சுகாதாரக் கட்டணக் கட்டமைப்புகளில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதே அதற்குக் காரணம்.
இந்தப் பராமரிப்புப் பணிகள் தேசிய பல்கலைக்கழகச் சுகாதார அமைப்பு, தேசிய சுகாதாரக் குழுமம் ஆகியவற்றைச் சேர்ந்த நோயாளிகளைப் பாதிக்கும்.
நவம்பர் 6ஆம் தேதி இரவு 9 மணி முதல், நவம்பர் 9ஆம் தேதி காலை 6 மணி வரை கட்டணச் சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்படும்.
இருப்பினும், மருத்துவச் சேவைகளும் நோயாளிகளுக்கான சிகிச்சைகளும் எவ்விதத் தடையுமின்றி வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில், நோயாளிகள் ஹெல்த்ஹப் செயலி, ஏஎக்ஸ்எஸ் இயந்திரங்கள், சுகாதாரக் குழுமங்களின் பிரத்தியேகச் செயலிகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கட்டணங்களைச் செலுத்தலாம்.
இவ்வாறு செலுத்தப்படும் கட்டணங்கள், பராமரிப்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு, கட்டண ரசீதுகளில் முறையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
உதவி தேவைப்படும் நோயாளிகள் தங்களது பொதுச் சுகாதாரத் தொடர்பு நிலையங்களை அழைத்துத் தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
