பழுதான ரயில் காரணமாக கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் சேதமடைந்த மின்கம்பிவடங்கள், இரு தடமாற்ற இயந்திரங்கள் உள்ளிட்டவை மாற்றப்பட்டு வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
டோவர் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே, சேதமடைந்த 30க்கும் மேற்பட்ட தண்டவாளப் பகுதிகளை மாற்றும் பணியையும் பொறியாளர்கள் தொடங்கிவிட்டதாக வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 27) ஆணையம் தெரிவித்தது. அவை ஒவ்வொன்றின் எடையும் ஒரு டன்னுக்குமேல் இருக்கும் எனக் கூறப்பட்டது.
“தண்டவாளங்கள் உடைந்துள்ளதால், பொறியியல் வாகனங்கள்மூலம் புதிய தண்டவாளங்களை அங்கு கொண்டுசெல்ல முடியவில்லை. மாறாக ‘ஜிக்’ (jig) எனப்படும் உருளைப்பொறிகளையே அதற்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது,” என்று ஆணையம் விளக்கியது.
ரயிலுக்கு மின்னாற்றல் வழங்கும் மூன்றாம் தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதம் வெள்ளிக்கிழமைக்குள் சரிசெய்யப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
கடந்த புதன்கிழமையன்று, சேவையிலிருந்து அகற்றப்பட்ட பழுதான ரயில் ஒன்று உலு பாண்டான் பணிமனைக்குச் சென்றபோது, கிளமெண்டி - டோவர் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்திலும் தண்டவாளத்தை ஒட்டி அமைந்துள்ள கருவிகளிலும் பெருஞ்சேதத்தை ஏற்படுத்திவிட்டது.
இதன் காரணமாக, டோவர் - கிளமெண்டி நிலையங்களுக்கு இடையே கிட்டத்தட்ட 1.6 கிலோமீட்டர் நீளத்திற்குத் தண்டவாளத்தில் 34 இடங்களில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சேதமடைந்த தண்டவாளப் பகுதிகளை மாற்றும்வரை அப்பகுதியில் ரயில்களைப் பாதுகாப்பாக இயக்க முடியாது.
பழுதான ரயிலால் மூன்று தடமாற்ற இயந்திரங்களும் தண்டவாள இணைப்பிகளும் சேதமடைந்துள்ளன. ரயிலுக்கு மின்னாற்றலை வழங்கும் மூன்றாம் தண்டவாளமும் சேதமடைந்ததால், கம்பிவடங்கள் வெளியில் தெரிந்தன.
இதனால், ஜூரோங் ஈஸ்ட் - புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையே ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனை அடுத்து, பூன் லே - ஜூரோங் ஈஸ்ட், குவீன்ஸ்டவுன் - புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையே பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செப்டம்பர் 30ஆம் தேதி திங்கட்கிழமைக்குள் கிழக்கு - மேற்கு தடத்தில் ரயில் சேவைகளை வழக்கநிலைக்குக் கொண்டுவர எஸ்எம்ஆர்டி நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது.
அதுவரையிலும், ஜூரோங் ஈஸ்ட் - புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையே இலவச இணைப்புப் பேருந்துச் சேவைகள் வழங்கப்படும். அத்துடன், பூன் லே - குவீன்ஸ்டவுன் நிலையங்களுக்கு இடையே இலவசப் பேருந்துச் சேவைகளும் இயக்கப்படுகின்றன.
நகரின் மையப் பகுதிக்குச் செல்வோர் வடக்கு - தெற்கு, தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட், டௌன்டவுன் ரயில் சேவைகளைப் பயன்படுத்தும்படி எஸ்எம்ஆர்டி அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி நிறுவனம் இரண்டையும் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இரவுபகலாகப் பழுதுபார்ப்புப் பணிகளில் ஈடுபடுவதாகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்திருந்தார்.
“விரிவான சேதம் என்பதால் அவர்கள் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டியுள்ளது. இதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
ரயில் சேவை பாதிப்பால் செப்டம்பர் 25ஆம் தேதியன்று ஏறக்குறைய 358,000 பயணிகளும் அதற்கு மறுநாள் 516,000 பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.