‘டைகர் பியர்’ தயாரிக்கும் ஏபிபிஎஸ் ஆட்குறைப்பு

‘டைகர் பியர்’ தயாரிக்கும் ஏபிபிஎஸ் ஆட்குறைப்பு

1 mins read
8e5cbcda-8b5c-41a3-8c4a-56c37df4c452
ஜாலான் அகமது இப்ராகிமில் உள்ள ஏபிபிஎஸ் நிறுவனக் கட்டடம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘டைகர் பியர்’ மதுபானத்தைத் தயார்செய்யும் ஏ‌ஷியா பசிபிக் புரூவரிஸ் சிங்கப்பூர் (ஏபிபிஎஸ்) நிறுவனம் அடுத்த ஈராண்டுகளில் சுமார் 130 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளது.

வரும் 2027ஆம் ஆண்டிறுதிக்குள் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெரிய அளவிலான மதுபானத் தயாரிப்பு நடவடிக்கைகளைக் குறைக்க ஏபிபிஎஸ் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அந்நிறுவனம் ஆட்குறைப்பு செய்யவுள்ளது.

ஏபிபிஎஸ்ஸின் ஆட்குறைப்பு தொடர்பில் முன்னதாக பிஸ்னஸ் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. தகவல் தெரிந்தவர்களை மேற்கோள்காட்டி அது செய்தி வெளியிட்டது.

இப்போது இந்த அறிவிப்பு அத்தகவலை உறுதிப்படுத்துகிறது.

“ஏபிபிஎஸ் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளிடம் தெரியப்படுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவளிக்க, தேசிய தொழிற்சங்கக் காங்கிரசுடன் (என்டியுசி) தொடர்புடைய அமைப்பான உணவு பானங்கள் மற்றும் சார்புத் தொழிலாளர்கள் சங்கத்துடன் (எஃப்டிஏடபிள்யூ) ஏபிபிஎஸ் இணைந்து செயல்படுகிறது,” என்று ஏபிபிஎஸ் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) அறிக்கை மூலம் தெரிவித்தது.

சிங்கப்பூரின் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் குறைந்தது 10 ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யப்போவதாக பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் கூறிய பிறகு ஐந்து வேலை நாள்களுக்குள் மனிதவள அமைச்சிடம் தெரியப்படுத்தவேண்டும்.

சிங்கப்பூரில் 536 பேர் ஏபிபிஎஸ்ஸிடம் வேலை செய்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்