இன்று சிங்கப்பூரில் நாம் கொண்டிருப்பது சாதாரண மலாய் கலாசாரம் அல்ல என்றும் மாறாக, அது கடந்த 60 ஆண்டுகால பல்லின மக்களின் பகிரப்பட்ட அனுபவங்களால் உருவான ஒரு தனித்துவமான மலாய் கலாசாரம் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
இந்த மரபுடைமை பரந்த மலாய் உலகின் வளமையிலிருந்து பெறப்பட்டாலும், ஒன்றாக இணைந்து தேசத்தை உருவாக்கும் பயணத்தால் இது தனித்துவமாக வரையறுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கம்போங் கிளாம் வட்டாரத்தில் உள்ள மலாய் மரபுடைமை நிலையத்தின் மறுதிறப்பு விழாவில் சனிக்கிழமை (ஏப்ரல் 25) அவர் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.
விரிவான கிட்டத்தட்ட மூன்றாண்டு மேம்பாட்டுப் பணிகளைத் தொடர்ந்து, புதிய தலைமுறை சிங்கப்பூரர்களை அவர்களின் வேர்களுடன் சிறப்பாக இணைக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடனும் ஈர்க்கக்கூடிய பல்லூடகக் கண்காட்சிகளுடனும் இந்தக் கலாசாரச் சின்னம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
“புதுப்பிக்கப்பட்ட இந்நிலையம் மலாய் சமூகத்தின் வளமான மரபுடைமையைத் தொடர்ந்து கௌரவிக்கிறது,” என்று கூறிய திரு வோங், இந்த மரபுடைமை நமது தேசிய வரலாற்றில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்றார்.
புதிய கண்காட்சிகள், ‘டாரி ரந்தாவ் கே ரூமா’ (வட்டாரத்திலிருந்து இல்லம் நோக்கி) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஜாவானியர்கள், புகிஸ், மினாங்கபாவ் போன்ற வட்டாரத்தின் பல்வேறு இனக்குழுக்கள் எவ்வாறு இங்கு வேரூன்றி ஓர் ஒருங்கிணைந்த சமூகமாக வளர்ச்சியடைந்தனர் என்பதை இந்தப் புதிய காட்சிப்பொருள்கள் சித்திரிக்கின்றன.
நவீன சிங்கப்பூரை உருவாக்கிய மலாய் முன்னோடிகளை நினைவுகூர்ந்த திரு வோங், எதிர்காலத் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்க அவர்களின் கதைகள் தொடர்ந்து பகிரப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தேசத்தை கட்டமைப்பது பல தலைமுறைகளைச் சேர்ந்த பலரின் பணியாகும் என்று கூறிய அவர், சமூகத்தின் முன்னோடிகள் பின்பற்றிய விழுமியங்களை எதிர்காலத் தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லும் வகையில், அவர்களின் கதைகளுக்கு உயிரூட்டுமாறு நிலையத்தைக் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த மறுதிறப்பு நிகழ்ச்சி ‘பெஸ்தா பெச்சா பாங்குங்’ (Pesta Pecah Panggung) என்ற ஒன்பது நாள் கலாசார விழாவின் தொடக்கத்தையும் குறித்தது. 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், 60க்கும் அதிகமான பங்காளித்துவ அமைப்புகள் என இந்த விழா பரந்த வட்டாரத்திற்கும் விரிவடைவதாக கூறினார் மலாய் மரபுடைமை அறநிறுவனத்தின் தலைவர் டாக்டர் நோர்ஷாஹ்ரில் சாத்.
நம்முடைய பகிரப்பட்ட மரபுடைமையை வருங்காலத் தலைமுறையினருக்காகக் கொண்டாடுவதற்கும் வளர்ப்பதற்குமான ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை இந்த மறுதிறப்பு பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
நிலையத்தின் கண்காட்சிகளின் அமைப்பில் சமூகத்தின் வலுவான ஈடுபாட்டைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பொருள்களில் கால்பகுதி பொதுமக்களால் நேரடியாக வழங்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டார்.
இந்தத் தொடக்க விழா, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த வட்டாரத்திற்குப் புத்துயிர் ஊட்டியது. களைகட்டிய உணவுச் சந்தையில் வருகையாளர்கள் திளைத்து மகிழ்ந்தனர். அதேவேளையில், கண்கவர் கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய இசை, உற்சாகமூட்டும் நடனங்கள் அடங்கிய துடிப்பான கலாசார அணிவகுப்புடன் மாலைப் பொழுது கோலாகலமாக அமைந்தது.

