புதுப்பிக்கப்பட்ட மலாய் மரபுடைமை நிலையம் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 25) பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளது.
கடந்த 2022ல் புதுப்பிப்புப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்ட மலாய் மரபுடைமை நிலையம், ‘டாரி ரந்தாவ் கே ரூமா’ (வட்டாரத்திலிருந்து இல்லம் நோக்கி) என்ற புதிய கருப்பொருளை மையமாகக் கொண்டு புதுப்பொலிவுடன் செயல்படும்.
சிங்கப்பூர் மலாய்ச் சமூகத்தின் அடையாள பரிணாம வளர்ச்சியை ஆராயும் இதன் ஆழமான கண்காட்சிகள், பல்லினச் சமூகம், பரந்த மலாய் உலகம் ஆகிய இரண்டுடனும் அச்சமூகத்திற்கு உள்ள ஆழமான தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றன.
நிலையத்தின் ஆறு நிரந்தரக் கண்காட்சிக் கூடங்களில் 279 அரும்பொருள்கள் இடம்பெற்றுள்ளன. 19ஆம் நூற்றாண்டு சிங்கப்பூரிலிருந்து தொடங்கி எதிர்காலச் சாத்தியங்களை கற்பனை செய்வது வரையிலான பயணமாக இது அமைகிறது.
மலாய்ச் சமூகத்தின் முன்னோடிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது இப்புதுப்பிப்பின் முக்கியச் சிறப்பம்சமாகும். முதல் பெண் ஹஜ் பயண முகவரான ஹஜ்ஜா மைமுனா, ஆரம்பகால வானொலி அறிவிப்பாளர் ஸஹ்ரா ஸாபா போன்றோரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளைப் பார்வையாளர்கள் இங்கு கண்டறியலாம்.
பார்வையாளர்களின் அனுபவம் வெவ்வேறு கருப்பொருள்களைக் கொண்ட ஆறு கூடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக துணை அருங்காட்சியகக் காப்பாளர் ஷஃபிகா ஜாஃபர் புதன்கிழமை (ஏப்ரல் 22) நடைபெற்ற செய்தியாளர் முன்னோட்ட நிகழ்ச்சியில் கூறினார்.
“இந்த அனுபவத்தை மெருகூட்டும் வகையில் ‘பண்பாட்டு நினைவுத் தாழ்வாரங்கள்’ (corridors of cultural memory) அமைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
முக்கியக் கண்காட்சிகளை இணைக்கும் இத்தாழ்வாரங்கள் அன்றாட வாழ்க்கை, பாரம்பரியங்கள், பகிர்ந்துகொள்ளப்பட்ட வரலாறுகள் ஆகியவற்றின் பதிவுகளை வழங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“காலவரிசைப்படி கருப்பொருள்களை அமைக்கும்போது, அதை மேலும் கச்சிதமாக வைத்திருக்க முயல்கிறோம். இதன்மூலம் கதைகளை இன்னும் தெளிவாக வெளிப்படுத்த முடிகிறது,” என்று கண்காட்சி அமைந்துள்ள இடத்தின் வடிவமைப்பு குறித்து அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தின் மரபுடைமையைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் வகையில், இக்கதைகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தை ஷஃபிகா வலியுறுத்தினார்.
“கதைகள் வெறும் கதைகள் மட்டுமல்ல, அவை தங்களுக்குள் பல நினைவுகளையும் எண்ணற்ற மதிப்புகளையும் கொண்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
பெஸ்தா பெச்சா பாங்குங் திறப்பு விழா
இந்த மைல்கல்லைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் 25 முதல் மே 3 வரை ‘பெஸ்தா பெச்சா பாங்குங்’ (எல்லைகளைக் கடந்து) என்ற தலைப்பில் ஒன்பது நாள் திறப்பு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
300 பேர் கலந்துகொள்ளும் சமூக அணிவகுப்பு, முழுமையாகப் பெண்களே நடத்தும் இசை நாடகம், நிலையத்தின் முதல்நாள் இரவு முழுவதும் நீடிக்கும் நிகழ்ச்சி என 50க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம்பெறும்.
எல்லைகளைக் கடப்பது என்ற கருப்பொருளை நிலைநிறுத்தும் நோக்கில் சமூக முன்னோடிகளின் சேவையைப் போற்றும் வகையில் விழா நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளதாக விழா இயக்குநர் ரிதுவான் ஸலானி தெரிவித்தார்.
கம்போங் கிளாம் வட்டாரத்தின் மீதான நிலையத்தின் தொடர் ஈடுபாட்டைப் பற்றி குறிப்பிட்டார் நிலையத்தின் பொது மேலாளர் ஹாஃபிஸ் ஷெரீஃப்.
“சிங்கப்பூர் மலாய் மரபுடைமை, பரந்த மலாய் உலகத்துடனான அதன் தொடர்புகள் குறித்த பார்வையாளர்களின் புரிதலை ஆழமாக்கும் வகையில், கண்காட்சிகளின் புதிய கருப்பொருளுக்கேற்ப திறப்பு விழா நிகழ்ச்சிகளைக் கவனத்துடன் வடிவமைத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் நிலையத்திற்கு வருகையளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், 2026 ஏப்ரல் 25 முதல் ஜூன் 28 வரை அனைத்துப் பார்வையாளர்களுக்கும் (சுற்றுலாப் பயணிகள் உட்பட) கண்காட்சிக் கூடங்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
மேல்விவரங்களுக்கு www.malayheritage.gov.sg என்ற இணையத்தளத்தை நாடலாம்.

