எல்லை தாண்டி பயணம் செய்யும் சிங்கப்பூர்வாசிகளின் விருப்பப் பட்டியலில் மலேசியா, ஜப்பான்

எல்லை தாண்டி பயணம் செய்யும் சிங்கப்பூர்வாசிகளின் விருப்பப் பட்டியலில் மலேசியா, ஜப்பான்

2 mins read
48e35a2b-baa7-4513-a502-043ccdeda529
சிங்கப்பூர்வாசிகள் தங்களின் டிசம்பர் மாத விடுமுறையின்போது மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளை பேரளவில் நாடிச் சென்றதாக தெரியவந்துள்ளது. - கோப்புப் படம்: தி ஆன்லைன் சிட்டிசன்

சிங்கப்பூர்வாசிகள் தங்களின் டிசம்பர் மாத விடுமுறையின்போது நாடிச் சென்ற இடங்களில் மலேசியாவும் ஜப்பானும் முன்னணி வகித்ததாகத் தெரியவந்துள்ளது.

எல்லை கடந்து சுற்றுலா சென்று செலவழிக்க வேண்டுமென்றால் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் ஆக அதிகமாக தெரிவு செய்தது மேற்கூறிய இரு நாடுகளைத்தான் என்று ‘விசா’ கடனட்டைத் தரவுகள் கூறின.

கோலாலம்பூர், ஜோகூர் பாரு போன்ற புகழ்பெற்ற இடங்கள்மீது மக்கள் கொண்ட ஈர்ப்பே மலேசியாவை நோக்கி மக்கள் படையெடுத்ததற்கான காரணம் என்றும், அதேவேளையில் குளிர்காலச் சுற்றுலா அம்சங்களால் ஜப்பான் வசதி படைத்த பயணிகளைக் கவர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பொதுவாக ஆண்டு வருமானம் $120,000 அல்லது அதற்கு மேல் உள்ள விசா கடனட்டைப் பயனீட்டாளர்கள் மற்றவர்களுடன் ஒப்புநோக்க ஒரு பயணத்திற்கு மூன்று மடங்கு அதிகமாக செலவிடுகிறார்கள் என்று அந்நிறுவனம் வியாழக்கிழமை (பிப்ரவரி 5) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் குடியிருப்பாளர்களைப் பொறுத்தவரையில், ஆண்டு இறுதி விடுமுறை என்றில்லாமல் பயணம் என்பது அவர்கள் முன்னுரிமை அளிக்கும் அம்சமாகவும் திகழ்வதாக தரவு சுட்டியது.

நுகர்வோரில் பத்தில் ஆறு பேர், சொத்து, கல்வி, ஆடம்பரப் பொருள்கள் போன்ற பிற பெரிய செலவினங்களைக் காட்டிலும் பயணத்திற்கு முதலிடம் அளிக்க திட்டமிடுவதும் தரவுகள் வழி தெரியவந்துள்ளதாக விசாவின் சிங்கப்பூர், புருணை நாடுகளுக்கான மேலாளர் திருவாட்டி அட்லின் கிம் தெரிவித்தார்.

டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கு மலேசியா சிறந்த பயணத்திற்கான இடமாக இருந்தது என்றும், எல்லை தாண்டி நடந்த செலவினப் பரிவர்த்தனைகளில் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில்  அது 18 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே காலகட்டத்தில் சிங்கப்பூரர்களின் மனங்கவர்ந்த இரண்டாம் பயண இடமாக ஜப்பான் இருந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்