தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருக்கு இம்மாதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுமதி செய்யும் மலேசியா

2 mins read
fb0230bf-33b0-4dda-8eb2-ae6238ccafae
முதல்முறையாக இடம்பெறவிருக்கும் இந்தப் பசுமை மின்சார விநியோகம், கடந்த ஜூன் மாதம் ‘மலேசிய எரிசக்திப் பரிமாற்றம்’ எனும் தளத்தின் மூலம் நடைபெற்ற போட்டித்தன்மை மிகுந்த ஏலக்குத்தகையைத் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.  - படம்: பிக்சாபே

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கான முதல் எல்லை தாண்டிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்றுமதி வர்த்தகம் 50 மெகாவாட் கொள்ளளவுடன் இம்மாதம் தொடங்கும் என்று மலேசிய எரிசக்தி, தண்ணீர் உருமாற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல்முறையாக இடம்பெறவிருக்கும் இந்தப் பசுமை மின்சார விநியோகம், கடந்த ஜூன் மாதம் ‘மலேசிய எரிசக்திப் பரிமாற்றம்’ எனும் தளத்தின் மூலம் நடைபெற்ற போட்டித்தன்மை மிகுந்த ஏலக்குத்தகையைத் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

“மலேசிய தேசிய பயனீட்டு நிறுவனமான ‘தெனாகா நேஷனல் பெர்ஹாட்’ (டிஎன்பி), ‘செம்ப்கார்ப் பவர் பிரைவேட் லிமிட்டெட்’ மூலம், இரண்டு நாடுகளுக்கு இடையே தற்போதுள்ள இணைப்புக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, சிங்கப்பூருக்கு மின்சாரத்தை விநியோகிக்கும்,” என்று அமைச்சு, அறிக்கை ஒன்றில் கூறியது.

அந்த ஏலக்குத்தகை நடைமுறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான எல்லை தாண்டிய மின்சார விற்பனைத் திட்டத்தின்கீழ், அமைச்சு மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒரு பகுதியாகும்.

கட்டங்கட்டமாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தற்போதுள்ள இணைப்புக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, மொத்தம் 300 மெகாவாட் கொள்ளளவுவரை விநியோகம் செய்ய நோக்கம் கொண்டுள்ளது.

‘மலேசிய எரிசக்திப் பரிமாற்றம்’ போட்டித்தன்மை மிகுந்த ஏலக்குத்தகை மூலம் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கான பசுமை மின்சார விநியோகத்தையும் கொள்முதலையும் செயல்படுத்த வகைசெய்வதாக அமைச்சு விளக்கியது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான எல்லை தாண்டிய மின்சார விற்பனைத் திட்டம் மலேசியாவின் எரிசக்தி உருமாற்ற விருப்பங்களுடனும் வட்டார அளவிலான மின்சார விநியோக ஒருங்கிணைப்புத் திட்டங்களுடனும் ஒத்துப்போகிறது.

மலேசியா 2025ஆம் ஆண்டில் ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகிவரும் நிலையில், இது ஒரு முக்கிய முன்னுரிமை என்று அமைச்சு குறிப்பிட்டது.

முன்னதாக, ‘டிஎன்பி’க்கும் ‘செம்ப்கார்ப் பவர்’ நிறுவனத்துக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோக உடன்படிக்கையைக் கையெழுத்திடுவதற்கான நிகழ்வு மலேசிய எரிசக்தி, தண்ணீர் உருமாற்ற அமைச்சில் நடைபெற்றது.

அந்த நிகழ்வை இருநாட்டு அரசாங்கப் பிரதிநிதிகளும் பார்வையிட்டனர்.

குறிப்புச் சொற்கள்