மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு 2017ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் பிப்ரவரி 19ஆம் தேதி அவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
பன்னீர் செல்வத்தின் விண்ணப்பங்கள் விசாரிக்கப்படுவதற்கு ஏதுவாக அது இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
தனது முன்னாள் வழக்கறிஞர் ஓங் யிங் பிங் மீது வழக்கறிஞர் சங்கத்திடம் பன்னீர் செல்வம் அளித்த புகார், போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ஊகித்தலுக்கு எதிரான சர்ச்சை ஆகியவற்றின் முடிவுகள் இன்னும் தெரியாததால் தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்திவைக்க உத்தரவிடுவதாக நீதிபதி வூ பி லி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிப்ரவரி 20ஆம் தேதி பன்னீர் செல்வத்தின் மரண தண்டனையை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.
சிங்கப்பூருக்கு 51.84 கிராம் ஹெராயின் போதைப் பொருளைக் கடத்தியதாக 2014ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 2017ஆம் ஆண்டு அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
சட்டப் பிரிவு 18(1)ன்கீழ் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை வைத்திருந்ததாக நிரூபிக்கப்பட்டவர், தான் அவ்வாறு வைத்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கும்வரை அந்தப் போதைப் பொருளை வைத்திருந்ததாகவே ஊகிக்கப்படுவார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் மேல்முறையீட்டுக்குப் பிந்திய விண்ணப்பங்களுக்கான சட்டம் (Pacc Act), 2024ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி நடப்புக்கு வந்ததை அடுத்து இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
புதிய சட்டம், சட்டவிதிகளையும் சட்ட நடைமுறைகளையும் பாதுகாப்பதாகச் சட்ட அமைச்சு அதன் இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது. இந்தச் சட்டம் நீதிமன்ற நடைமுறைகள் தவறாகக் கையாளப்படுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.
மேல்முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட பிறகு மரண தண்டனைக் கைதிகள் தங்கள் தண்டனை நிறைவேற்றத்தைத் தள்ளிப்போடுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்குமுன் என்னென்ன செய்யவேண்டும் என்று அது வரையறுக்கிறது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் மட்டுமே அந்த விண்ணப்பங்களை விசாரிக்கும்.
முன்னாள் வழக்கறிஞர் ஓங் யிங் பிங் மீது வழக்கறிஞர் சங்கத்திடம் அளிக்கப்பட்ட புகாரில் தான் முக்கியச் சாட்சி என்று கூறிய பன்னீர் செல்வம், அதன் முடிவு குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புவதாக தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 13ஆம் தேதி, இந்தப் புகார் சங்கத்தின் விசாரணை குழுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பப்படும் என்று வழக்கறிஞர் சங்கம் பன்னீரிடம் தெரிவித்தது.

