சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 37 வயது மலேசிய ஆடவர்மீது நீதிமன்றத்தில் சனிக்கிழமை (நவம்பர் 15) குற்றஞ்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோசடி பணம் பெற சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டை ஆடவர் எதிர்நோக்குவார்.
மோசடிக் கும்பலுக்குத் துணைபோகும் மலேசியர்கள் பணம், நகை, விலையுயர்ந்த பொருள்கள் போன்றவற்றைப் பெறுவதற்காக சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் போக்கைக் காண்பதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது.
செப்டம்பர் 28ஆம் தேதி சிங்கப்பூர் நாணய ஆணைய ஊழியரைப் போல ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் குறித்து புகார் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்க அதிகாரி போல தம்மைக் காண்பித்துக்கொண்ட ஆடவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அவரது வங்கியில் உள்ள பணம் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவரது வங்கிக் கணக்குப் பணமோசடிக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.
அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் நாணய ஆணையத்திலிருந்து பேசுவதாகக் கூறி வேறு சிலர் பெண்ணைத் தொடர்புகொண்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் விசாரணைக்காகத் தம்மிடம் இருந்த பணத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் ஒப்படைக்கும்படி சந்தேக நபர்கள் கூறினர்.
பெண்ணும் $4,400க்கும் அதிகமான பணத்தையும் $2,000க்கும் அதிகமான விலையுயர்ந்த பொருள்களையும் அறிமுகம் இல்லாத நபரிடம் கொடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் காவல்துறை அதிகாரிகள் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் 37 வயது ஆடவரை அடையாளம் கண்டனர்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) ஆடவர் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது கைதுசெய்யப்பட்டார்.
சிங்கப்பூரைவிட்டு வெளியேறும் முன் ஆடவர் பணத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் பாதிக்கப்பட்டவரிடமிருந்து பெற்றது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அவை மலேசியாவில் உள்ள மற்றொரு நபரிடம் கைமாற்றப்பட்டது.

