பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், மலேசிய - சிங்கப்பூர் தலைவர்களின் 11வது ஓய்வுத்தளச் சந்திப்பில் கலந்துகொள்வதற்காகத் திங்கட்கிழமை (ஜனவரி 6) கோலாலம்பூர் சென்றுள்ளார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மலேசியாவின் உயர்கல்வித் துறை அமைச்சர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் அவரை வரவேற்றார்.
பின்னர், மலேசியாவின் தேசிய மரபுடைமைத் தலங்களில் ஒன்றான ருமா தங்சியில் அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம், திரு வோங்கிற்கு விருந்தளித்து உபசரித்தார்.
மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நல்லுறவைக் குறிக்கும் வகையில் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் திங்கட்கிழமை இரவு, இரு நாடுகளின் தேசியக் கொடிகளில் இடம்பெற்றிருக்கும் சிவப்பு, வெள்ளை, நீல நிறங்களில் ஒளியூட்டப்பட்டிருந்தது.
விருந்துக்குப் பிறகு சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிரதமர் வோங், “இரு நாடுகளுக்கும் நன்மை அளிக்கக்கூடிய வகையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது குறித்துக் கலந்துரையாடினோம். இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், இந்தக் கலந்துரையாடல் இருதரப்பு உறவுகள் ஆக்ககரமான பாதையில் செல்ல வகைசெய்யும்,” என்று கூறினார்.
ஓய்வுத்தளச் சந்திப்பில் கலந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வருடாந்தரச் சந்திப்பு ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் மலேசியாவின் புத்ரா ஜெயாவில் நடைபெறுகிறது. இரு நாட்டுத் தலைவர்களும் அதில், இருதரப்பு ஒத்துழைப்பிற்கான ஒட்டுமொத்தப் பாதையை வகுப்பர்.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) காலை, பிரதமர் வோங்கிற்கு பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இரு நாட்டுப் பேராளர்களும் கலந்துரையாடுவர்.
தொடர்புடைய செய்திகள்
இரு பிரதமர்களின் முன்னிலையில், பல்வேறு துறைகளுக்கான இருதரப்பு ஒப்பந்தங்கள், புரிந்துணர்வுக் குறிப்புகள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.
பிரதமர் வோங்குடன் அவரது மனைவியும் அமைச்சர்கள், துணையமைச்சர் என எட்டுப் பேர் கொண்ட குழுவும் மலேசியா சென்றுள்ளனர்.
துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், கல்வி அமைச்சர் சான் சுன் சிங், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங் டாட், வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சிம் ஆன் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.