சிங்கப்பூரில் முனைவர் கல்வி பயின்ற மலேசியப் பெண் ஒருவருக்கு மீண்டும் சிங்கப்பூர் வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அப்பெண் சிங்கப்பூரில் அரசியல் ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டது அதற்குக் காரணம். தான் பின்பற்றும் சித்தாந்தப் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இளையர்கள் சிலரை ஃபாடியா நாட்வா ஃபிக்ரி ஊக்குவித்ததாக உள்துறை அமைச்சு வெள்ளிக்கிழமை (மார்ச் 27) தெரிவித்தது.
சிங்கப்பூரில் மாணவர்களையும் பல்வேறு சமூகங்களையும் ஒன்று திரட்டுவது, குறிப்பிட்ட சில இலக்குகளுக்காக இடையூறு விளைக்கக்கூடிய, வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் இளையர்களை ஊக்குவித்ததாக அமைச்சு சொன்னது.
திருவாட்டி ஃபாடியா, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சென்ற ஆண்டு (2025) முனைவர் கல்வியை முடித்தார். மார்ச் 22ஆம் தேதி சிங்கப்பூர் வர முயன்றபோதுதான் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது தனக்குத் தெரியவந்ததாக அவர் இம்மாதம் 22, 23ஆம் தேதிகளில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
“உள்ளூர் அரசியலில் வெளிநாட்டவர் ஈடுபடுவதை நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம். சட்டத்திற்குப் புறம்பாக, வன்முறையும் இடையூறும் விளைவிக்கக்கூடிய பொதுப் போராட்டத்தில் ஈடுபடுவதையும் பொறுத்துக்கொள்ளமாட்டோம்.
“ஃபாடியா விரும்பத்தகாத வருகையாளர். அதனால், இங்கு வர அவருக்குத் தடை விதித்துள்ளோம்,” என்று உள்துறை அமைச்சு கூறியது.
தனக்குத் தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்களைக் குடிநுழைவு அதிகாரிகளிடம் கேட்டதாகவும் அவற்றைத் தங்களால் வெளியிட முடியாது என்று அதிகாரிகள் பதிலளித்ததாகவும் திருவாட்டி ஃபாடியா சமூக ஊடகப் பதிவுகளில் குறிப்பிட்டார்.
ஐந்தாண்டுகளாகத் தான் சிங்கப்பூரில் வசித்ததாகவும் ஜனவரி மாதம் 31ஆம் தேதி முனைவர் பட்டம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். தனது வழக்கறிஞர் பணியை விட்டுவிட்டு முனைவர் பட்டக்கல்வியை மேற்கொள்ளச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
திருவாட்டி ஃபாடியா, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தென்கிழக்காசிய ஆய்வுப் பள்ளியில் பயின்றதாகவும் 2025ல் அவர் பட்டம் பெற்றதாகவும் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

