தாதிமைத் துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை ஆவலுடன் கையாள்வதுடன் இத்தொழிலை அதிகம் நேசிப்பவர் 25 வயது பிரவீன் சந்திரன்.
சிங்கப்பூரின் தாதியரில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினர் மட்டுமே ஆண்கள். அவர்களில் பிரவீனும் ஒருவர்.
தொடக்கத்தில் விலங்கு மருத்துவர் ஆக ஆசைப்பட்ட பிரவீன், உயர்நிலைப் பள்ளியின்போது தாதிமைத் துறை பற்றிய விளக்க உரையைச் செவிமடுத்து அத்துறையில் ஆர்வம் கொண்டார்.
பிரவீனின் இந்த முடிவை ஏற்க அவரின் தந்தை ஆரம்பத்தில் தயங்கினார்.
ஆனால், காலப்போக்கில் பிரவீனின் தாதிமைத் திறன்களால் தம்முடைய குடும்பத்தாரது நன்மதிப்பைப் பெற்றார்.
“2020ல் என் தந்தை காரை ஓட்டிச்சென்றபோது அவருக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டது. தாதிமைக் கல்வி பயின்றதால் நிலைமையை உடனே கண்டறிந்து தக்க சமயத்தில் அவரைக் காப்பாற்ற முடிந்தது,” என்றார் பிரவீன்.
ஆறு ஆண்டுகளாக இந்தத் துறையில் உள்ள பிரவீன், தற்போது ராஃபிள்ஸ் மருத்துவமனையில் மத்திய சுத்திகரிப்பு விநியோகப் பிரிவில் (Central Sterile Supply Department) பணியாற்றுகிறார். திறந்த அறுவை சிகிச்சைக்கான கருவிகள், துணைக்கருவிகள் எனப் பல முக்கியமான பொருள்களைக் கிருமிநீக்கத்தின்வழி தூய்மையாக வைத்திருக்கும் பெரும் பொறுப்பு இந்தப் பிரிவுக்கு உள்ளது.
இப்பிரிவில் பணியாற்றும் தாதியர், நோயாளிகளுடன் அடிக்கடி நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெறுவதில்லை.
கெடுபிடியான வழிமுறைகளுக்கு உட்பட்டு, படிப்படியாகச் செய்ய வேண்டிய இந்தக் குறிப்பிட்ட வேலைக்கு ஆய்வுத்திறனும் தீர யோசித்து முடிவெடுக்கும் திறனும் தேவைப்படுவதாகக் கூறினார்.
தொடக்கத்தில் அறுவை சிகிச்சைக் கூடத்தில் பணியாற்றிய இவருக்கு, அங்கு பணியாற்றுவதில் அதிக ஆவல் ஏற்படவில்லை. ஆயினும், வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டு திறன்களை வளர்க்க விரும்பிய பிரவீன், இந்தப் பிரிவில் தலைமைத்துவ வாய்ப்பும் கிட்டும் எனத் தம் மேலதிகாரியிடம் அறிந்து செயல்பட்டார்.
இக்கால நடைமுறைக்கு ஏற்ப, எந்நேரமும் வேலையைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக வேலை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் திண்ணமாக உள்ளார் பிரவீன்.
“ஓய்வு மனதிற்குத் தெளிவைத் தரும். வேலையைச் சரியாகச் செய்வதற்கு அந்தத் தெளிவு தேவை. வேலைக்கு அப்பால் வாழ்க்கை இருப்பதால் இயன்றவரை வேலையிடத்தில் அதிக நேரம் தங்க வேண்டாம் என்று இளம் ஊழியர்களிடம் கூறுவேன்,” என்று அவர் கூறினார்.
உடற்பயிற்சிக் கூடத்தில் எடை தூக்கி உடலைக் கட்டுடன் வைத்திருக்கும் பிரவீன், எஞ்சியுள்ள ஓய்வு நேரத்தைக் குடும்பத்தினருடன் செலவழிக்கிறார்.
கேப்லன் உயர்கல்விக் கழகத்தின் வழி அவர் தற்போது நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் தாதிமைத்துறையில் இளநிலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.
பிறர் தம்மைப் பின்பற்றவேண்டும் என்ற எதிர்பார்ப்பை விடுத்து பிறருக்கு வழிகாட்டும் திறனை இந்த இளம் தாதி வளர்த்துக்கொள்ள விரும்புகிறார்.
“தாதிமைத் துறை மேன்மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும். கற்பதற்கு ஏராளமாக உள்ளதால் இத்துறையில் உள்ளவர் கற்பதை நிறுத்தக்கூடாது,” என்றார் பிரவீன்.