ஐந்து தவணைக் காலம் மக்கள் செயல் கட்சி (மசெக) நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ள டாக்டர் முகம்மது மாலிக்கி ஓஸ்மான் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக திங்கட்கிழமை (ஏப்ரல் 21) அறிவித்துள்ளார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் மசெக சார்பில் தமக்குப் பதிலாக ஹஸ்லினா அப்துல் ஹலிம் போட்டியிடுவார் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, வெளியுறவு அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சருமான டாக்டர் மாலிக்கி, 59, முன்னதாக அறிவித்திருந்தார்.
“2004ஆம் ஆண்டிலிருந்து என்னை நம்பி பல்வேறு அரசியல் பொறுப்புகளை அளித்ததற்கும் பல்வேறு அமைச்சுகளில் சேவையாற்றும் வாய்ப்பை வழங்கியதற்கும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று டாக்டர் மாலிக்கி திங்கட்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
“சவால்களை எதிர்கொண்டு சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிப் பாதையில் செல்வதை உறுதிசெய்வதில் பிரதமர் லீ (அப்பதவியை அவர் வகித்தபோது), பிரதமர் வோங் மற்றும் எனது சக அமைச்சரவை உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்குக் கிடைத்த வரம்.
“குறிப்பாக, பல்வேறு சமூகத் திட்டங்கள் வாயிலாக மக்கள் வாழ்வை மேம்படுத்த எனது சக மலாய், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியது அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது. தனிநபர்களும் குடும்பங்களும் செழிப்படைவதைக் கண்டது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்துள்ளது,” என்றார் டாக்டர் மாலிக்கி.
2004 முதல் தமக்கு அரசியல் பதவி கொடுத்து தம் மீது நம்பிக்கை வைத்த மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு டாக்டர் மாலிக்கி தனது பதிவில் நன்றி தெரிவித்தார். முன்னாள் பிரதமருடனும் தற்போதைய பிரதமர் வோங்குடனும் அமைச்சரவையில் உள்ள மற்றவர்களுடன் இணைந்து சவால்களைக் கடந்து சிங்கப்பூரின் தொடர்ச்சியான வெற்றியை வடிவமைப்பதில் பணியாற்றியது ஒரு பாக்கியம் என்று விவரித்துடன் அடித்தளத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், பல்வேறு அமைச்சுகளில் அவருடன் பணியாற்றியவர்கள் ஆகியோருக்கும் டாக்டர் மாலிக்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“அன்புள்ள குடியிருப்பாளர்களே, கடந்த 24 ஆண்டுகளாக உங்களுக்கு சேவை செய்ய அனுமதித்ததற்கும் நன்றி. இந்தப் பொன்னான நினைவுகளை நான் எப்போதும் பொக்கிஷமாகக் கருதுவேன்,” என்றும் டாக்டர் மாலிக்க தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.