தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பொதுத் தேர்தல் 2025

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் அமைச்சருக்கு மாற்றாகக் களமிறங்கும் புதுமுகம்

2 mins read
11933651-e17b-47a6-8f97-ec8622bbd1cc
அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான். - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 3

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் பிரதமர் அலுவலக அமைச்சரும், கல்வி, வெளியுறவு அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சருமான திரு மாலிக்கி ஒஸ்மானுக்கு பதிலாகப் புதுமுகம் திருவாட்டி ஹஸ்லினா அப்துல் ஹலிம் களமிறக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (ஏப்ரல் 12) காலை நடைபெற்ற மக்கள் செயல் கட்சியின் தொகுதி உலாவின்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் மாலிக்கி ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் தாம் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தார்.

“இந்தப் பொதுத் தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடும் அணியில் இடம்பெறமாட்டேன் என்பதை உறுதிப்படுத்த இயலும்.

“பொதுத் தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் புதிய உறுப்பினராகத் திருவாட்டி ஹஸ்லினா நியமிக்கப்படுவதற்கு வழிவகுக்க விரும்புவதாலும், அதற்கான என் ஆதரவைக் வெளிக்காட்ட விரும்புவதாலும் இத்தகவலைப் பகிர்கிறேன்,” என்று கூறினார் திரு மாலிக்கி.

மேற்கூறிய தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதுகுறித்து பதிலளித்த திரு மாலிக்கி, ஓய்வு பெறுவதாகத் தாம் கூறவில்லை என்றும் எங்குப் போட்டியிடக்கூடும் அல்லது அடுத்த முடிவு என்ன என்பது பற்றிய தகவல்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என்றும் சொன்னார்.

‘மேக் எ வி‌ஷ்’ (Make-A-Wish) அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகியான திருவாட்டி ஹஸ்லினா ஊடக அனுபவமும் உள்ளவர்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் ஆளும் மக்கள் செயல் கட்சியின் தொகுதி உலாக்களில் அடிக்கடி தென்படும் புதுமுகம் ஹஸ்லினா அப்துல் ஹலிமுக்கு ஆதரவளிக்குமாறும் திரு மாலிக்கி அடித்தள தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.

2011ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் இடம்பிடித்துள்ள திரு மாலிக்கி தமது அரசியல் பயணத்தை செம்பவாங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடங்கினார்.

கடந்த தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் துணைப் பிரதமரான ஹெங் சுவீ கியட் தலைமையிலான மசெக அணி 53.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இது, 2015ஆம் ஆண்டில் அக்கட்சி பெற்ற 60.7 விழுக்காட்டைவிடக் குறைவு என்பது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்