பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் திங்கட்கிழமை (மே 19) ஷேர்வூட் சாலையில் உள்ள வெளியுறவு அமைச்சுக் கட்டடத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்,
அப்போது அவர் தாம் மேற்கொண்ட பணிகள், அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக வெளியுறவு அமைச்சில் அவர் பதவி வகித்து வருகிறார்.
உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்காக அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு வெளிநாட்டு தூதர்களை தமது வீட்டுக்கு அழைத்து உபசரித்ததும் அவற்றில் ஒன்று.
தமது நண்பர்கள், அண்டைவீட்டார், சமூகத் தலைவர்கள் ஆகியோருடன் வெளிநாட்டுத் தூதர்கள் பழகி நட்புணர்வு மலரும் வாய்ப்பை அவர் உருவாக்கினார்.
வெளிநாட்டுத் தூதர்களுடன் ஆழமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும்போது நம்பிக்கை உணர்வு பிறப்பதாக வெளியுறவு இரண்டாம் அமைச்சருமான டாக்டர் மாலிக்கி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதன்மூலம் புதிய ஒப்பந்தங்கள், திட்டங்கள் குறித்து வெளிநாட்டுப் பங்காளிகளுடன் கலந்துரையாடுவது சாத்தியமாவதாக அவர் கூறினார்.
“அனைத்துலக அளவில் கலந்துரையாடும்போது உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். வெளியறவு அமைச்சில் கடந்த பத்தாண்டுகளாக நான் இதைத்தான் செய்து வருகிறேன்,” என்றார் டாக்டர் மாலிக்கி.
2015ஆம் ஆண்டில் டாக்டர் மாலிக்கி வெளியுறவு மூத்த துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
24 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு ஓய்வுப்பெறுவதாகப் பொதுத் தேர்தலுக்கு முன்பு இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று அறிவித்தார்.
2001ஆம் ஆண்டில் அவர் அரசியலில் காலடி எடுத்துவைத்தார்.
அப்போது அவருக்கு 36 வயது.
அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் மக்கள் செயல் கட்சி சார்பாக செம்பவாங் குழுத் தொகுதியில் போட்டியிட்ட ஆறு பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றார்.
டாக்டர் மாலிக்கி பல்வேறு அமைச்சுகளில் பதவி வகித்தவர்.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவர் பிரதமர் அலுவலக அமைச்சராகவும் கல்வி, வெளியுறவு இரண்டாம் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
வெளியுறவு இரண்டாம் அமைச்சர் என்கிற முறையில், பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூரின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டார்.
பல ஆண்டுகளாகச் சிங்கப்பூருக்காக அயராது உழைத்த டாக்டர் மாலிக்கி, ஓய்வுப்பெற்ற பிறகு குடும்பத்துடன் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
முன்பு டிசம்பர் மாதங்களில் மட்டுமே விடுமுறை பயணம் மேற்கொள்ள முடிந்ததாக அவர் கூறினார்.
இனி டிசம்பர் மட்டுமின்றி மற்ற மாதங்களிலும் விடுமுறைப் பயணம் மேற்கொள்ள முடியும் என்றார் அவர்.

