சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2024) தீங்குநிரல் பாதிப்புச் சம்பவங்களின் எண்ணிக்கை 67 விழுக்காடு அதிகரித்து 117,300ஆகப் பதிவானது.
இவற்றில் பெரும்பாலான சம்பவங்களுக்கு, எளிதில் பாதிப்படையக்கூடிய மென்பொருள்களுக்கு உரிய நேரத்தில் மேம்பாடுகளை நிறுவாதது காரணம் என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு (CSA) கூறியுள்ளது.
பிற நாட்டு அரசாங்கங்கள் அல்லது குற்றக் கும்பல் அமைப்புகளின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் தாக்குதல் போன்ற மேம்பட்ட தொடர்ச்சியான மிரட்டல் விடுக்கும் தாக்குதல்கள் (Advanced persistent threats), தீங்குநிரலால் பாதிக்கப்பட்ட இத்தகைய கட்டமைப்புகளைப் பயன்படுத்தி இணையத் தாக்குதல்களை மேற்கொள்கின்றன.
புதன்கிழமை (செப்டம்பர் 3) ஒன்பதாவது முறையாக வெளியிடப்பட்ட வருடாந்தர சிங்கப்பூர் இணையத் துறை அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
தீங்கு நிரலால் பாதிக்கப்பட்ட கணினிகளை இணையத் தாக்குதல்காரர்கள் தொலைவிலிருந்தே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலும்.
உரிய நேரத்தில் மேம்பாடுகள் நிறுவப்படாத இணையத் தொடர்புக் கருவிகள், இணையப் பயன்பாட்டிற்கான கேமராக்கள், அறிவார்ந்த தொலைக்காட்சிச் சாதனங்கள் போன்றவற்றின் மூலம் அவர்கள் கணினிக் கட்டமைப்புகளை அணுகக்கூடும்.
பிணைநிரல் தாக்குதல்கள் உள்ளிட்ட இணைய அச்சுறுத்தல்கள் அதிகரித்தாலும் பயனாளர்கள் மென்பொருள்களுக்கு உரிய நேரத்தில் மேம்பாடுகளை நிறுவத் தவறுவதைச் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு சுட்டியது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சியின் ஒரு பகுதியாக, 2024 செப்டம்பரில் அனைத்துலக அளவில் நடைபெற்ற நடவடிக்கையில் சிங்கப்பூர் பங்குபெற்றது. அதன்கீழ், இங்குள்ள 2,700 கருவிகளிலிருந்து தீங்கு நிரல்கள் அகற்றப்பட்டன.
அரசாங்கங்களையும் முக்கிய உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து உளவுக் குழுக்கள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் உலகெங்கும் அதிகரித்திருப்பதை அமைப்பின் அறிக்கை சுட்டியது.
எடுத்துக்காட்டாக ஆசியான் அரசாங்க அமைப்புகள், கம்போடிய அரசியல் கட்சி, லாப நோக்கமற்ற அமைப்பு ஆகியவற்றின் மீது ‘டிஏஜி-43’ எனும் குழு மேற்கொண்ட தாக்குதல்களை அது குறிப்பிட்டது.
இத்தகைய தாக்குதல்காரர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் நோக்கில், முக்கிய உள்கட்டமைப்பு உரிமையாளர்களுடனும் அவர்களின் விநியோகிப்பாளர்களுடனும் அணுக்கமாகப் பணியாற்றுவதாக அமைப்பு கூறியது.