ஊடுருவப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் அனுப்பப்படும் தீங்குநிரல்

ஊடுருவப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் அனுப்பப்படும் தீங்குநிரல்

படம்: சிங்கப்பூர் காவல்துறை

03 Nov 2026 - 3:02 pm

2 mins read

நண்பர்கள், சக ஊழியர்கள், மேலதிகாரிகள் ஆகியோரின் வாட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி, கணினிகளை முடக்கும் புதிய வகை மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த மோசடியில் இதுவரை நிதி இழப்பு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாகக் திங்கட்கிழமையன்று (நவம்பர் 2) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.

இப்புதிய பாணி மோசடியில், ஊடுருவலுக்கு ஆளான வாட்ஸ்அப் கணக்குகளிலிருந்து பிறருக்கு வேலை தொடர்பான கோப்புகள் அல்லது முறையான ஆவணங்களைப் போன்ற கோப்பு இணைப்புகள் அனுப்பப்படுகின்றன.

அவை பெரும்பாலும் 'Invoice 2026-09-15.iso’, 'Statement of Account_54d3.zip' அல்லது ‘Salary Revision.rar' போன்ற பெயர்களில் அமைந்திருக்கும். அலுவலக ஆவணங்களை ஆய்வுசெய்யும் சாக்கிலோ அல்லது நிதி மேலாளர்களுக்கு அவற்றை அனுப்பிவைக்குமாறு கூறியோ, அக்கோப்புகளைக் கணினியில் திறந்து பார்க்கும்படி பெறுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

‘வாட்ஸ்அப் டெஸ்க்டாப்’ அல்லது ‘வாட்ஸ்அப் வெப்’ தளங்களைப் பயன்படுத்துவோர் இந்த வலையில் விழுந்து, அந்தக் கோப்புகளைத் திறக்கும்போது தீங்குநிரல் நேரடியாக அவர்களின் கணினிகளில் பதிவிறக்கம் செய்யப்படுகிறது.

அக்கோப்பு திறக்கப்பட்டவுடன், பின்னணியில் அந்தத் தீங்குநிரல் மென்பொருள் தானாகவே நிறுவப்படுகிறது. இதன் மூலம் விசைப்பலகை அழுத்தங்களைப் பதிவு செய்தல், திரையைப் படமெடுத்தல், வெளிப்புற ஊடுருவல் சேவையகங்களுடன் தொடர்புகொள்ளுதல் போன்ற செயல்களைச் செய்து, பயனரின் கணினிக் கட்டுப்பாட்டை மோசடிக்காரர்கள் தங்கள் வசப்படுத்துகின்றனர்.

அதன் பின்னர் இணையத் தாக்குதல் நடத்துவோர், பாதிக்கப்பட்டவர்களின் வாட்ஸ்அப் கணக்கைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அதே தீங்குநிரலை அவர்களின் தொடர்புகளுக்கு அனுப்புகின்றனர்.

அல்லது கடன் வாங்குவது போல நடித்துப் பணம் கேட்டு குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். தங்களது சாதனங்களில் அசாதாரண மாற்றங்கள் நிகழும்போது அல்லது சந்தேகத்திற்குரிய வகையில் குறுஞ்செய்திகள் வந்திருப்பதாக நண்பர்கள் எச்சரிக்கும்போது மட்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்கு ஊடுருவப்பட்டிருப்பதை உணர்வதாகக் காவல்துறை குறிப்பிட்டது. சிங்கப்பூரில் குற்றச் செயல்களில் மோசடிகளே தொடர்ந்து முதலிடம் வகித்து வருகின்றன. 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே இத்தகைய சதித்திட்டங்களால் $410.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்