ஈசூனில் ஆடவர் மரணம்: 45 வயது சந்தேகப் பேர்வழி கைது

ஈசூனில் ஆடவர் மரணம்: 45 வயது சந்தேகப் பேர்வழி கைது

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Jul 2024 - 12:31 pm

2 mins read

ஈசூன் ரிங் சாலையில் ஜூலை 27ஆம் தேதியன்று 35 வயது ஆடவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 49 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து காலை 8.35 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைந்தபோது ஆடவர் ஒருவர் சுயநினைவின்றி கிடப்பதை அதிகாரிகள் கண்டனர்.

அவர் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஆடவர் மீது ஜூலை 29ஆம் தேதியன்று கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

மாண்டவருக்கும் கைது செய்யப்பட்டவருக்கும் ஒருவரையொருவர் தெரியும் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

ஈசூன் ரிங் சாலையில் உள்ள புளோக் 803ன் பத்தாவது மாடிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சென்றபோது, அங்குள்ள மின்தூக்கித் தளத்தில் சடலம் ஒன்று துணியால் போர்த்தப்பட்டிருந்தது.

தரையிலும் சுவரிலும் ரத்தக் கறை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கட்டடத்தின் பத்தாவது மாடிக்குள் யாரும் நுழைய முடியாதபடி தடுப்பு போடப்பட்டது.

துப்பு தேடி அதிகாரிகள் அவ்விடத்தை அலசினர்.

சம்பவ இடத்துக்கு நான்கு காவல்துறை வாகனங்களும் குற்றப் புலனாய்வுத் துறைக்குச் சொந்தமான வேன் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டது.

காவல்துறையினர் விசாரணை நடத்துவதை அண்டைவீட்டுக்காரர்கள் தங்கள் வீடுகளிலிருந்தும் தடுப்புக்கு வெளியிலிருந்தும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்தக் கட்டடத்துக்கான குப்பைத் தொட்டியில் இருந்த பொருள்களையும் அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர்.

மாலை 4.25 மணி அளவில் ஆடவரின் சடலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

மாண்டவர் அந்தக் கட்டடத்தில் வசித்தவர் என்று நம்பப்படுகிறது.

சம்பவம் நிகழ்வதற்கு முன்பு இரண்டு ஆடவர்களுக்கிடையே மிகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய குடியிருப்பாளர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்
குற்றம்மரணம்விசாரணை