$696,000 மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது; 64 வயது ஆடவர் கைது

$696,000 மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது; 64 வயது ஆடவர் கைது

2 mins read
a29c4ad4-0e14-428d-822a-a9342c43f3ed
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் 3,340 போதைப்புழங்கிகளுக்கு ஒரு வாரத்திற்குப் போதுமானது என்று போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு திங்கட்கிழமையன்று (ஜூலை 29) நடத்திய அதிரடிச் சோதனையில் போதைப்பொருள் தொடர்பிலான குற்றமிழைத்த சந்தேகத்தின்பேரில் 64 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

காத்தோங்கில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பு வட்டாரத்தின் மின்தூக்கி முகப்புப் பகுதியில் அந்தச் சிங்கப்பூரரை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

மேயர் சாலையில் இருந்த அவரது பதுக்கிடத்திலிருந்து $696,000 மதிப்பிலான போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

அவற்றில், ஹெராயின், 6.25 கிலோ கஞ்சா, 437 கிராம் ‘ஐஸ்’, 53 கிராம் எக்ஸ்டசி, ஒன்பது எரிமின்-5 மாத்திரைகள், ஆறு ‘மெத்தடோன்’ புட்டிகள் ஆகியவை அடங்கும்.

இவை 3,340 போதைப்புழங்கிகளுக்கு ஒரு வாரத்திற்குப் போதுமானது என்று போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

இதன் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகிறது.

‘ஐஸ்’, ஹெராயின், கஞ்சா ஆகியவையே கடந்த 2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் போதைப்புழங்கிகள் அதிகம் பயன்படுத்திய போதைப்பொருள்களாக இருந்தன என்று போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் ஆண்டறிக்கை தெரிவித்தது. போதைப்பொருள் புழங்கிய கைதானோரில் 94 விழுக்காட்டினர் குறைந்தது அம்மூன்றில் ஒரு போதைப்பொருளைப் பயன்படுத்தினர்.

சென்ற ஆண்டு $15.37 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் சிங்கப்பூரில் கைப்பற்றப்பட்டது. முந்திய 2022ஆம் ஆண்டில் இம்மதிப்பு $16.66 மில்லியனாக இருந்தது.

2022ஆம் ஆண்டு 68.22 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்ட நிலையில், அதற்கு மறு ஆண்டு அது 21% கூடி, 82.87 கிலோவானது.

2023ஆம் ஆண்டு சாதனையளவில் கஞ்சா புழங்கிகள் கைதுசெய்யப்பட்டபோதும், கஞ்சாப் புழக்கம் 46% குறைந்து, 71.79 கிலோவாகப் பதிவானது. அதுபோல, ‘ஐஸ்’ போதைப்பொருளும் 2022ஆம் ஆண்டைவிட 2023ல் குறைவாகவே பிடிபட்டது.

குறிப்புச் சொற்கள்