பாசிர் ரிஸ் பூங்காவில் ஆயுதம் வைத்திருந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினர்.
பூங்காவில் உள்ள பறவைக் கண்காணிப்பு கோபுரத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) இந்தச் சம்பவம் நடைபெற்றதாக சீன நாளேடான லியான்ஹ சாவ்பாவ் தெரிவித்தது.
அந்த ஆடவர் உணர்ச்சிவசப்பட்டு மற்றவர்களை தாக்குவதைப் போல நடந்துகொண்டதாகவும் நாளேடு குறிப்பிட்டது.
காயம் அடைந்த ஆடவர் பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் நிலைமையை நேரில் கண்டவறிவதற்காக பிற்பகல் 12.40 மணியளவில் பூங்காவுக்குச் சென்றனர். அப்போது கண்காணிப்புக் கோபுரத்தை நோக்கிச் செல்லும் இரு பாதைகளும் மூடப்பட்டிருந்தன.
சம்பவ இடத்தில் ஐந்து காவல்துறை வாகனங்களுடன் குறைந்தது மூன்று அதிகாரிகள் காணப்பட்டனர்.
அந்த இடத்தில் உலா வந்த நிக் வீலர், 52, என்பவர், தரையிலும் கோபுரத்திற்கு அருகே இருந்த புதரிலும் இரு அதிகாரிகள் எதையோ தேடிக் கொண்டிருந்தனர் என்றார்.
அருகில் வசிக்கும் கணக்காளரான பிரயன் சோங், 30, கோபுரத்திற்கு இட்டுச் செல்லும் பாதையில் வழக்கமாக நடைப் பயிற்சியை மேற்கொள்வார். ஆனால் சம்பவத்தன்று பாதை மூடப்பட்டதால் மாற்றுப் பாதையில் அவர் பயிற்சியைத் தொடர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் ஒருவரை காவல்துறை சுட்டது பற்றி கேள்விப்பட்டதும் அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதற்கு முன்பு, 2022 மார்ச் மாதத்தில் புளோக் 33 பெண்டமியர் ரோட்டில் போதையில் இருந்த 64 வயது நபரை காவல்துறையினர் சுட்டனர்.
இங் எங் குய் என்ற அந்த நபர் அதிகாரிகளிடம் சரணடையாமல் தாக்க முயற்சி செய்தார்.
காவல்துறை அதிகாரிகள் இங் மீது மூன்று முறை மின்சாரம் பாய்ச்சும் இயந்திரத்தால் சுட்டு (டேசர் கருவி) அடக்க முயன்றனர்.
இருப்பினும், இங், கட்டுக்கடங்காமல் அதிகாரிகளை நோக்கி கத்தியால் தாக்க வந்தார்.
அந்த சமயத்தில் தமக்கும் சக ஊழியர்களுக்கும் இங் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று எண்ணிய காவல்துறை அதிகாரி ஒருவர், அவரை நோக்கி சுட்டார். துப்பாக்கிக் குண்டு இங்கின் மார்பில் பாய்ந்ததால் அவர் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சூது இல்லை என்று பின்னர் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.