காலாங்கில் இம்மாதம் 20ஆம் தேதி சாலை விபத்தில் ஈடுபட்டதை அடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய ஓட்டுநர் ஐந்து நாள்கள் கழித்து பிடிபட்டார். வன்முறை தொடர்பான குற்றங்களையும் ஆடவர் ஏற்கெனவே எதிர்கொண்டார்.
பாலஸ்டியர் சாலையை நோக்கிச் செல்லும் லாவண்டர் ஸ்திரீட்டில் காரைக் கவனக்குறைவாக ஓட்டிய 33 வயது முகமது அஷிக் அப்துல்லாமீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் மோதிய வாகனத்தின் ஓட்டுநர் மாண்டார்.
விபத்துக்கு முன் 2024ஆம் ஆண்டு ஏற்கெனவே அஷிக் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் தேதி, உட்லண்ட்சில் உள்ள கழக வீட்டிலில் இருந்த அஷிக் புகைப்படச் சட்டகத்தை எட்டாவது மாடியிலிருந்து கீழே வீசியதாக நம்பப்படுகிறது. அதே வீட்டில் அன்று பெண் ஒருவரைக் கன்னத்தில் அறைந்த குற்றத்தையும் அஷிக் எதிர்கொண்டார்.
பிணையில் வெளிவந்த அஷிக், மே 23ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்குத் திரும்ப தவறிவிட்டார். அதையடுத்து அவரைக் கைதுசெய்யும்படி நீதிமன்றம் கைதாணையைப் பிறப்பித்தது.
அப்போது ஓட்டம் பிடித்த அஷிக் ஆபத்தான முறையில் காரை ஓட்டியதில் விபத்துக்குள்ளானார். ஆஷிக்கின் கார் அருகில் உள்ள வாகனங்களை இழுத்துச் செல்லும் கனரக வாகனத்தின்மீது மோதியதில் 57 வயது ஓட்டுநர் சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டர். அவர் பின் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

