ஹோட்டலில் மனைவி கொலை; கணவர் கைது

2 mins read
692d12d2-9186-42e2-8e1b-39f8a41cb86f
கோப்புப் படம்: - இணையம்

சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது மனைவியைக் கொன்றதாக நம்பப்படும் 41 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது 38 வயது மனைவியைக் கொன்றுவிட்டதாக அந்த ஆடவர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) காலை 7.40 மணிக்கு புக்கிட் மேரா அக்கம்பக்கக் காவல் நிலையத்துக்குச் சென்று கூறியதாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின்பேரில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

சம்பந்தப்பட்ட மாதை அதிகாரிகள் ‘கேப்ரி பை ஃபிரேசர் சைனா ஸ்குவேர்’ (Capri by Fraser China Square) ஹோட்டல் அறை ஒன்றில் நினைவிழந்த நிலையில் கண்டனர். அவர் உயிரிழந்ததை சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்தில் உறுதிப்படுத்தினர்.

சம்பவம் நிகழ்ந்த ஹோட்டலை ஃபிரேசர்ஸ் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் நடத்துகிறது. அது, சைனாடவுன் பாய்ன்ட் கடைத்தொகுதிக்கு அருகே அமைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேப்ரி ஹோட்டலுக்கு நேரில் சென்றது. அங்கே ஹோட்டலுக்கு வெளியே காவல்துறை கார்கள் காணப்படவில்லை, தடுப்புகள் போடப்படவும் இல்லை. ஹோட்டலில் தங்கியிருந்தோர் மட்டும்தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அருகிலுள்ள உணவுக் கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், காலை எட்டு மணிக்கு ஹோட்டலுக்கு வெளியே ஒரு அவசர மருத்துவ உதவி வாகனமும் குறைந்தது நான்கு காவல்துறை கார்களும் நிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.

காலை ஒன்பது மணிக்குப் பிறகு காவல்துறை கார்கள் அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர் சொன்னார். நண்பகல் 12 மணியளவில் காவல்துறை கார், வேன் என இரு காவல்துறை வாகனங்கள் ஹோட்டலுக்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்திலிருந்து புறப்பட்டதாகத் தெரிகிறது.

சந்தேக நபரான 66 வயது ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்யப்பட்ட ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இது, இவ்வாண்டு இதுவரை நிகழ்ந்துள்ள ஐந்தாவது கொலைச் சம்பவமாகும். கடந்த செப்டம்பர் மாதம் ஈசூனில் அண்டை வீட்டாருக்கிடையே சத்தம் தொடர்பில் சண்டை மூண்டதைத் தொடர்ந்து ஒரு மாது கொல்லப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்