அங் மோ கியோவில் 67 வயது மாதைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 66 வயது ஆடவர் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 29) கைது செய்யப்பட்டார்.
அங் மோ கியோ அவென்யூ 6 வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 125ல் உள்ள வீடு ஒன்றில் அந்த மாது நினைவிழந்த நிலையில் காணப்பட்டார். அவர் மாண்டது சம்பவ இடத்திலேயே உறுதிசெய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
வியாழக்கிழமை அதிகாலை 1.25 மணியளவில் சம்பவம் குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
மாண்ட மாது, சந்தேக நபர் இருவரும் பழக்கப்பட்டவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணை தொடர்கிறது.
சம்பவம் நிகழ்ந்த புளோக்கின் நான்காவது தளத்தில் உள்ள வீட்டுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேரில் சென்றபோது அங்கு வாசலில் காவல்துறைக் குறிப்பு இருந்தது. சந்தேக நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். சனிக்கிழமையன்று (நவம்பர் 30) அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இச்சம்பவம் உட்பட சிங்கப்பூரில் இவ்வாண்டு இதுவரை எட்டு கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.