ஆயுதங்கள், மின்சிகரெட்டுகளை வைத்திருந்ததாகக் கூறி ஆடவர் கைது

1 mins read
22d80f3e-de83-4856-a876-6d1866a88665
ஆடவரின் வாகனத்தில் மின்சிகரெட்டுகளும், வரி கட்டப்படாத சிகரெட்டுகளும் இருந்ததாக நம்பப்படுகிறது. - படங்கள்: லுய் புவாய் லியோங்

ஆயுதங்கள், மின்சிகரெட்டுகள், வரி கட்டப்படாத சிகரெட்டுகள் ஆகியவற்றை வைத்திருந்ததாக நம்பப்படும் ஆடவர் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த 27 வயது ஆடவர் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) கைது செய்யப்பட்டார்.

உட்லண்ட்ஸ் அவென்யூ 2, 5 சந்திப்பில் புதன்கிழமை காலை 5.45 மணியளவில் இதுகுறித்துத் தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. சம்பந்தப்பட்ட ஆடவர் கத்தி வகை ஆயுதங்களை வைத்திருந்தார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

அவரின் வாகனத்தில் மின்சிகரெட்டுகள், வரி கட்டப்படாத சிகரெட்டுகள் ஆகியவை இருந்ததாகவும் நம்பப்படுகிறது. அவை சுகாதார அறிவியல் ஆணைய, சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

சம்பந்தப்பட்ட ஆடவர், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அந்த விவகாரம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது.

இச்சம்பவம் பதிவான காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலையோரத்தில் குறைந்தது ஏழு காவல்துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது காணொளியில் தெரிகிறது. கைகளை முதுகுக்குப் பின்னால் வைத்திருந்த ஆடவர் ஒருவர் சாலையோர நடைபாதையில் அமர்ந்திருந்ததும் அந்தக் காணொளியில் தெரிந்தது.

அப்பகுதி பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்