4 வயதுச் சிறுவனை அறைந்ததாகக் கூறப்படும் ஆடவர் கைது

4 வயதுச் சிறுவனை அறைந்ததாகக் கூறப்படும் ஆடவர் கைது

படம்: THREEOFAKIND_SIBLINGS/இன்ஸ்டகிராம்

09 Mar 2026 - 3:51 pm

2 mins read

பாலர்பள்ளி ஒன்றுக்கு வெளியே நான்கு வயதுச் சிறுவனை அறைந்ததாகக் கூறப்படும் ஆடவர் கடந்த மார்ச் 6ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

காவல்துறையில் புகார் செய்யப்பட்டபின், சிறுவன் ஒருவனுக்குக் காயம் விளைவித்ததற்காக அந்த 36 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த ஆடவர் எப்போது கைதுசெய்யப்பட்டார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

கடந்த மார்ச் 6ஆம் தேதி அந்தச் சிறுவனின் தாயார் இன்ஸ்டகிராமில் அதன் தொடர்பில் பதிவிட்டிருந்தார்.

அன்றைய தினம் நண்பகல் வேளையில், உட்லண்ட்சில் உள்ள பாலர்பள்ளிக்கு வெளியே, தமது மகன் இருமுறை அறையப்பட்டதாகத் தாயார் குறிப்பிட்டார்.

தமது மகன் விளையாடிக்கொண்டிருந்தபோது, சக மாணவரிடம் அவன் நடுவிரலைக் காட்டியதாகத் தமது பணிப்பெண் கூறியதாகத் தாயார் தெரிவித்தார்.

அப்போது, மற்றொரு குழந்தையின் தந்தை என்று நம்பப்படும் அந்த ஆடவர் தமது மகனின் கழுத்துப் பட்டையை இழுத்துப் பிடித்து, அவனது முகத்தில் அறைந்ததாகத் தாயார் கூறினார்.

அவரது பணிப்பெண் தலையிட்டுச் சிறுவனை அங்கிருந்து இழுத்துச் செல்ல முயன்றபோது, அந்த ஆடவர் சிறுவனை விடாமல் பிடித்துக்கொண்டு, அவனது மற்றொரு கன்னத்திலும் அறைந்ததாகத் தாயார் சொன்னார். அதனால், அந்தச் சிறுவன் அழத் தொடங்கியதாகவும் அவர் கூறினார்.

“இந்தச் சம்பவம், பள்ளிக்கு வெளியில் இருந்த மற்ற பெற்றோர், பணிப்பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் முன்னால் நடந்தது,” என்றார் சிறுவனின் தாயார்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்