ஜூரோங்கில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் ஆறு வயதுச் சிறுவனை அறைந்ததாகக் கருதப்படும் 38 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 22 அன்று பிற்பகல் 2.40 மணியளவில் வெஸ்ட்கேட் மால் கடைத்தொகுதி அமைந்துள்ள எண் 3, கேட்வே டிரைவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
14 வயதிற்குட்பட்ட நபருக்கு எதிரான குற்றங்களுக்காக, அதிகரித்த தண்டனைச் சட்டத்தின்படி, வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்காக அந்த நபர் பின்னர் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் பற்றி தங்களுக்கு பிற்பகல் 3.20 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சிறுவன், இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.