காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கி, காயம் விளைவித்ததாகக் கூறப்படும் 41 வயது ஆடவர், பிப்ரவரி 16ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார்.
காவல்துறைக்கு பிப்ரவரி 15ஆம் தேதி இரவு 7.35 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. புளோக் 81 வாம்போ டிரைவ் பகுதியில் ஒரு பெண்ணைச் சிறு தடி கொண்டு ஆடவர் ஒருவர் அடிக்க முயல்வதாகச் சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைவதற்குள் ஆடவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக பிப்ரவரி 16ஆம் தேதி காவல்துறை தெரிவித்தது.
தங்ளின் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உடனே விசாரணையைத் தொடங்கி, ஆடவரின் அடையாளத்தையும் அவர் இருக்கும் இடத்தையும் கண்டறிந்தனர்.
அதையடுத்து பிப்ரவரி 16ஆம் தேதி அதிகாலையில் அதிகாரிகள் ஆடவரை அணுகியபோது அவர்களுடன் ஒத்துழைக்க ஆடவர் மறுத்ததுடன் முரட்டுத்தனமாகவும் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
ஓர் அதிகாரியை பேஸ்பால் மட்டை, குவளை ஆகியவற்றைக் கொண்டு ஆடவர் தாக்க முயன்றதாக நம்பப்படுகிறது. பின்னர், காலை 3.15 மணியளவில் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
தலை, மணிக்கட்டு பகுதிகளில் 49 வயது காவல்துறை அதிகாரிக்குக் காயம் ஏற்பட்டதாகவும் இரண்டு நாள்கள் மருத்துவ விடுப்புடன் அதிகாரி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆடவர் மீது பிப்ரவரி 17ஆம் தேதி குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

