மது அருந்திவிட்டுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சிராங்கூன் ரோட்டின் நடுவே கிடந்த ஆடவர் சனிக்கிழமை (அக்டோபர் 4) கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த ஆடவருக்கு வயது 44. பொது இடத்தில் மது அருந்திவிட்டு, நினைவற்றுக் கிடந்த குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார்.
ஊடகத்தினரின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை, எண் 900, சிராங்கூன் ரோட்டில் நடந்த சம்பவம் தொடர்பில் பின்னிரவு 2.25 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாகக் கூறியது.
சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியில், போக்குவரத்துச் சமிக்ஞை விளக்கு பச்சை நிறத்தில் இருந்தபோதும் கார் ஒன்று திடீரென நிறுத்தப்படுவதைக் காட்டுகிறது. சாலையின் நான்கு தடங்களில் ஒன்றில், ஆடவர் ஒருவர் குறுக்கே கிடப்பதும் தெரிகிறது.
பொது இடத்தில் மது அருந்திவிட்டு, நினைவற்றுக் கிடந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆடவருக்கு ஒரு மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ, $1,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.