பொது இடத்தில் தொந்தரவு செய்ததாக நம்பப்படும் ஆடவர் கைது

பொது இடத்தில் தொந்தரவு செய்ததாக நம்பப்படும் ஆடவர் கைது

1 mins read
fcdd4591-7a45-4bfd-b109-7b4624e20b72
சம்பவம் பதிவான காணொளியில் இடம்பெறும் காட்சி. - காணொளிப் படம்: எஸ்ஜி ரோட் விஜிலான்டே / ஃபேஸ்புக்

பொது இடத்தில் தொந்தரவு செய்ததாகவும் குறும்புச் செயல்களில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் 52 வயது ஆடவர் திங்கட்கிழமை (மார்ச் 23) ஜூரோங் வெஸ்ட்டில் கைது செய்யப்பட்டார்.

தொழில்துறை வட்டாரத்தில் அமைந்துள்ள 18 என்டர்பிரைஸ் ரோட்டில் உதவி தேவைப்படுவதாக திங்கட்கிழமை பிற்பகல் 1.35 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சம்பந்தப்பட்ட ஆடவர் சுயநினைவுடன் இருந்ததாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

எஸ்ஜி ரோட் விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளியில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் கையில் ஒரு பொருளுடன் ஆடவர் நடந்துகொண்டிருந்தது தெரிந்தது. சிறிது தூரம் பின்னால் காவல்துறையினரும் மற்றோர் ஆடவரும் அவரைப் பின்தொடர்ந்தது தெரிந்தது.

பிறகு சந்தேக நபர் மரத்தடியில் அமர்ந்தபடி அதிகாரிகளை எதிர்க்கும் விதத்தில் நடந்துகொண்டார். சம்பவ இடத்தில் குறைந்தது ஐந்து அதிகாரிகள் காணப்பட்டனர். அவர்களில் ஒருவரின் கையில் கவச ஆயுதம் (shield) இருந்தது.

ஆடவர், கனரக லாரி ஒன்றை நிறுத்தி அதன் சன்னலை உடைத்ததாகக் காணொளியின் குறிப்பில் (caption) விவரிக்கப்பட்டது. பிறகு மற்றொரு லாரிக்கும் அவர் அவ்வாறே செய்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்