அரசாங்கத்தின் மின்பற்றுச்சீட்டுக் கட்டமைப்பான ‘ரிடீம்எஸ்ஜி’ இணையத்தளத்தை ஊடுருவிய முயற்சியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 39 வயது ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
‘ரிடீம்எஸ்ஜி’ தளத்திலுள்ள மின்பற்றுச்சீட்டுகளின் இணைப்புக்குள் புகுவதற்குத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து தளத்தின் நிர்வாகக் குழுவினர் காவல்துறைக்கு ஜூலை 28ஆம் தேதி புகார் அளித்தனர்.
இருந்தபோதும் அந்த முயற்சிகள் யாவும் தோல்வியுற்றதாகவும் மின்பற்றுச்சீட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் காவல்துறை, ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
புகார் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாளில் குற்றவியல் விசாரணைப் பிரிவின்கீழ் உள்ள இணையக் குற்றப் படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த நபரை அடையாளம் கண்டு ஜூலை 29ல் கைது செய்தார்.
இந்தக் குற்றங்களைப் புரியப் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
கணினியைத் தவறாகப் பயன்படுத்தும் சட்டத்தின் தொடர்பில் அந்த ஆடவர் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.
விசாரணை தொடர்கிறது.