சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிபோல ஆள்மாறாட்டம் செய்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 44 வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அச்சம்பவம் தாடர்பாக காவல்துறை இன்று (ஆகஸ்ட் 31) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வங்கியிலிருந்து ரொக்கம் பெறுவதற்கான காசோலை ஒன்றுடன் ஆடவர் ஒருவர் தமது வங்கிக் கிளைக்கு வந்திருப்பதாகவும் அதில் சந்தேகம் இருப்பதாகவும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் காவல்துறைக்கு யுஓபி வங்கியிடம் இருந்து அழைப்பு வந்தது.
அதனைத் தொடர்ந்து மோசடி ஒழிப்புப் பிரிவு, மத்திய காவல்துறை பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து ஆடவரின் அடையாளத்தைக் கண்டுபிடித்து அவரை அன்றே கைது செய்தனர்.
முன்னதாக, 65 வயது மூதாட்டி ஒருவரிடம் இருந்து ரொக்கக் காசோலையை வாங்கி வருமாறு அந்த ஆடவருக்கு வெளிநாட்டு மோசடிக் கும்பல் ஒன்று உத்தரவிட்டு இருந்தது.
சட்டவிரோதப் பண நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதற்காக ரொக்கக் காசோலை வழங்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சின் அதிகாரிபோல ஆள்மாறாட்டம் செய்த கும்பலால் அந்த மூதாட்டி மிரட்டப்பட்டு இருந்தார்.
வெளிநாட்டு மோசடிக் கும்பலுக்காக ஆடவர் செயல்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவரிடமிருந்து ரொக்கக் காசோலை, மலேசியாவிலுள்ள வங்கியின் ஏடிஎம் அட்டைகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
அந்த ஆடவர் மீது நாளை (செப்டம்பர் 1) குற்றம் சாட்டப்பட உள்ளது.