கேலாங் அருகே சிட்டி பிளாசா கடைத்தொகுதியில் சுவிஸ் ராணுவக் கத்தியைக் கொண்டு மற்றோர் ஆடவரைத் தாக்கியதாகக் கூறப்படும் 30 வயது ஆடவர்மீது புதன்கிழமை (ஆகஸ்ட் 20) குற்றஞ்சாட்டப்படும்.
எண் 810 கேலாங் சாலையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்து திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9.20 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது சிட்டி பிளாசாவின் முகவரியாகும். அதையடுத்து, அதே நாள் பிற்பகல் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) காவல்துறை தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவருடன் சந்தேக நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதன் பிறகு கத்தியால் அவரைத் தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்படும். அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்குச் சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இத்தண்டனைகளில் ஏதேனும் ஒன்று அல்லது பலவும் ஒன்றாகச் சேர்த்து விதிக்கப்படலாம்.

