சாங்கி விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவரை இறுகப் பற்றியதுடன் விமானப் பணியாளரைக் கொல்லப்போவதாக மிரட்டியதாகக் கூறப்படும் ஆடவர் மீது குற்றம் சாட்டப்படவிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) அவர் மீது குற்றம் சாட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவத்தின்போது அந்த 42 வயது ஆடவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் பற்றிய தகவல் பிப்ரவரி 27ஆம் தேதி காலை 6.55 மணியளவில் கிடைத்ததாகக் காவல்துறை, மார்ச் 31ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. அந்த ஆடவர், இந்தியக் குடிமகன் என்றும் கூறப்பட்டுள்ளது.
குடிபோதையில் அந்த ஆடவர், அருகிலிருந்த பயணியை இறுகப் பற்றியவாறு தனக்கு முன்னே இருந்த இருக்கையைத் தள்ளி, மற்ற பயணிகளுக்குத் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்தது.
அந்த ஆடவரை நிதானப்படுத்த விமானப் பணியாளர்கள் முயன்றபோது, ஆண் பணியாளர் ஒருவரது மணிக்கட்டை அந்த ஆடவர் திடீரெனப் பிடித்து அவரைக் கொல்லப்போவதாக மிரட்டியதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தொடர்ந்து இவ்விதம் நடந்துகொண்டால் விமானம் வந்த வழியில் திரும்பிச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்ட பிறகுதான் அந்த ஆடவர் ஒத்துழைக்கத் தொடங்கினார். பயணம் முழுவதற்கும் அவர் கட்டுப்பாட்டு வார்களால் பின்னப்பட்டார்.
விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியதும், சாங்கி விமான நிலையக் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த ஆடவரைக் கைது செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அது எந்த நிறுவனத்தைச் சேர்ந்த விமானச் சேவை, எங்கிருந்து விமானம் புறப்பட்டது போன்ற விவரங்களைக் காவல்துறையினர் குறிப்பிடவில்லை.
மற்றொருவரைத் தாக்கும் விதமாக நடந்துகொண்டது, கொல்லப்போவதாக மிரட்டியது, குடிபோதையில் விமானத்திற்குள் ஒழுங்கைச் சீர்குலைக்கும் விதமாக நடந்துகொண்டது ஆகியவை தொடர்பில் அந்த ஆடவர் மீது குற்றம் சாட்டப்படும்.
முதல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ1,500 வெள்ளி வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
இரண்டாவது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
மூன்றாவது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையோ 20,000 வெள்ளி அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.