பூன் லே பேருந்து முனையத்தில் ஏற்பட்ட கைகலப்பில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பேருந்து முனையத்தில் மார்ச் 28 நேர்ந்த சம்பவத்தை அடுத்து 30 வயது ஆடவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
பேருந்து ஓட்டுநருக்கும் பயணி ஒருவருக்கும் பயணத்தின்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.
பூன் லே பேருந்து முனையத்தில் இறங்கிய பின் பயணி பேருந்து ஓட்டுநரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து ஓட்டுநர் உடனடியான பேருந்துச் செயல்பாடுகளுக்கான கட்டுப்பாட்டு நிலையத்திடம் தெரிவித்தார்.
அதையடுத்து கட்டுபாட்டு நிலையம் காவல்துறை அதிகாரிகள் உதவியை நாடியது. அதிகாரிகள் வரும்வரை பயணி அந்தச் சம்பவ இடத்தைவிட்டு செல்வதை ஓட்டுநர் தடுக்க முயன்றபோது பயணியால் தாக்கப்பட்டார்.
காலை 7.45 மணிக்கு உதவி கோரி அழைப்புவந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் சுய நினைவுடன் இருந்த 31 வயது பேருந்து ஓட்டுநரை அருகில் உள்ள இங் தெங் ஃபோங் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நடந்ததை உறுதிசெய்ய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.