ஆபத்தான முறையில் நவம்பர் மாதம் இருமுறை காரை ஓட்டிய நபர்மீது வியாழக்கிழமை (டிசம்பர் 26) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கூ ஜின் என்னும் அந்த 48 வயது ஆடவர் நவம்பர் மாதம் 18ஆம் தேதி மரினா கோஸ்டல் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையில் ஆபத்தான முறையில் காரை ஓட்டினார்.
ஒரு தடத்தில் இருந்து மற்றொர் தடத்திற்கு திடீரென மாறினார். மேலும் தேவையில்லாமல் காரை மெதுவாக ஓட்டியும் உள்ளார். இதனால் விரைவுச்சாலையில் இருந்த மற்ற வாகனமோட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதேபோன்று, கூ மீண்டும் நவம்பர் 27ஆம் தேதி பன்டான் வேலியில் வாகனமோட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக காரை ஓட்டினார்.
கூவின் நடவடிக்கையை கண்காணித்தக் காவல்துறையினர், அவர்மீது விசாரணை நடத்தினர். அதன் பின்னர் ஆடவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூ மீதான நீதிமன்ற விசாரணை ஜனவரி 8ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் 5,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.