கடந்த ஆகஸ்ட் மாதம் பதின்ம வயது ஆடவரிடமிருந்து பணம் திருடுவதற்கான திட்டத்தை வரைந்ததாக நம்பப்படும் ஆடவர் மீது வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 5) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, 19 வயது ஆடவர் ஒருவருக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக 29 வயது பெனடிக்ட் யீ ஹோங் ஃபாய் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. யீ, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரின் வழக்கு செப்டம்பர் 12ஆம் தேதி மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும்.
ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று ஹவ்காங் கிரீன் கடைத்தொகுதிக்கு வெளியே சம்பந்தப்பட்ட பதின்ம வயது ஆடவரிடமிருந்து 32,000 வெள்ளியைக் கொள்ளையடிக்க முயன்ற கும்பலில் யீ இருந்தார் என்று சந்தேகிக்கப்படுகிறது. அன்றைய தினம் யீ, டெலிகிராம் செயலிவழி அந்த ஆடவரைத் தொடர்புகொண்டார் என்று விசாரணையில் தெரிய வந்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
சுமார் 32,000 வெள்ளிக்கு மின்னிலக்க நாணயங்களை அவரிடம் நேரில் சந்தித்து விற்க யீ திட்டமிட்டதாக நம்பப்படுகிறது என்று காவல்துறை வியாழக்கிழமை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது. ஹவ்காங் கிரீன் பகுதியில் அவரைச் சந்திக்க பதின்ம வயதுடையவர் ஒப்புக்கொண்டார் என்றும் நம்பப்படுகிறது.
அப்போது ஆடவரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க யீ அவரைத் தாக்குவதற்கு இருவரை அனுப்பிவைத்ததாகக் கருதப்படுகிறது. ஆகஸ்ட் 29ஆம் தேதி மாலை ஆறு மணியளவில் அவ்விருவரில் ஒருவர் அந்தப் பதின்ம வயது ஆடவரைக் கையால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
தன்னிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்படும் முன் இளையர் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
சம்பவம் நிகழ்ந்தபோது யீ அங்கிருந்தாரா என்பது இதுவரை தெரியவில்லை.

