தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில் நிலையத்தில் சிறுநீர் கழித்ததாக நம்பப்படுபவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
c3e92bd4-f60f-437e-bd16-d9a63c15c950
கோப்புப் படம்: - இணையம்

ஊட்ரம் பார்க் பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) நிலையத்தில் உள்ள மின்படிகளின் கைப்பிடி மீது சிறுநீர்க் கழித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது திங்கட்கிழமையன்று (ஜனவரி 13) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பொதுமக்களுக்குத் தொந்தரவு இழைத்ததாக அந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த 41 வயது லீ குவோருய் என்ற அந்த ஆடவர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) இரவு 10 மணியளவில் ஊட்ரம் பார்க் நிலையத்தில் சிறுநீர் கழித்ததாக நம்பப்படுகிறது.

ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தில் முன்றாவது நுழைவாயிலுக்கு அருகே இருக்கும் மின்படிகளை நோக்கி ஆடவர் ஒருவர் நடந்து சென்று அதன் மீது சிறுநீர் கழித்ததைத் தனது நண்பர் கண்டார் என்று ஸ்டெல்லா கீ எனும் இணையவாசி சனிக்கிழமை (ஜனவரி 10) ‘கம்ப்ளெயின்ட் சிங்கப்பூர்’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மின்படிக்கு அருகே அந்த ஆடவர் நின்றுகொண்டிருந்ததாக நம்பப்படும் காட்சி பதிவான மூன்று வினாடி காணொளியையும் அவர் பகிர்ந்தார்.

சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் ரயில் நிலைய பயணிகள் சேவை அலுவலகத்துக்குச் சென்று புகார் கொடுத்ததாக திருவாட்டி கீ தெரிவித்தார். அந்நேரத்தில் இன்னொருவர் அந்த ஆடவரைக் கண்காணித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதை உணர்ந்த சந்தேக நபர் அருகில் இருக்கும் மின்தூக்கியில் அங்கிருந்து சென்றதாகவும் திருவாட்டி கீ சொன்னார்.

அந்த ஆடவர் அடையாளம் காணப்பட்டதும் அவரைக் கைது செய்ததாகக் காவல்துறை தெரிவித்தது. செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 14) லீ குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்